[X] Close
 

7 ஆண்டுகால பணியில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை: நீதிபதி செலமேஸ்வர்


no-regrets-says-justice-chelameswar

  • பாரதி
  • Posted: 23 Jun, 2018 11:57 am
  • அ+ அ-

உச்ச நீதிமன்ற நீதிபதியாக 7 ஆண்டுகால பணியில் எனக்கு எவ்வித வருத்தமும் ஏற்படவில்லை என ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் தெரிவித்திருக்கிறார். நீதிபதி ஜஸ்டி செலமேஸ்வர் நேற்று (வெள்ளிக்கிழமை) பணி ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற நாளன்றே அவர் தனது சொந்த ஊருக்குப் புறப்பட்டார். பணி ஓய்வு பெற்றால் ஒருநாள்கூட டெல்லியில் இருக்கக்கூடாது என்ற தனது கொள்கையைக் கடைபிடிக்கும் விதமாக ஓய்வு பெற்ற அன்றைய தினமே அவர் சொந்த ஊருக்குப் புறப்பட்டார்.

விமான நிலையத்திலிருந்து தொலைபேசி மூலம் தி இந்து ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த அவர், "எனது கடமையை என் திறமைக்கு உட்பட்டு செய்திருக்கிறேன். ஏற்கெனவே சொல்லியிருந்ததுபோல் ஓய்வு பெற்றவுடனேயே எனது சொந்த ஊருக்குப் புறப்பட்டுவிட்டேன். இப்போது நான் ஹைதராபாத் விமான நிலையத்தில் இருக்கிறேன். எனது சொந்த ஊரில் சில காலம் ஓய்வு எடுக்கத் திட்டமிட்டுள்ளேன். உச்ச நீதிமன்றத்தில் 7 ஆண்டுகால பணியில் எனக்கு எவ்வித வருத்தமும் ஏற்படவில்லை" என்றார்.
உச்ச நீதிமன்றத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என்று உரக்கச் சொன்னவர் செலமேஸ்வரர். கடந்த ஜனவரி 12-ம் தேதி நீதித்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பத்திரிகை ஊடகங்களுக்குப் பேட்டியளித்தனர். அவ்வாறு பேட்டியளித்த 4 நீதிபதிகளில் செலமேஸ்வரரும் ஒருவர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக நால்வரும் தெரிவித்தனர். நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றனர்.

நீதிபதி செலமேஸ்வரர் குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாசலய்யா, "நீதிமன்றத்தில் செலமேஸ்வரர் ஒரு சன்னியாசி" என வர்ணித்திருந்தார்.

எந்த பொறுப்பும் வேண்டாம்..
நீதிபதி செலமேஸ்வர் 2016-ல் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு ஒரு பேட்டியளித்திருந்தார். அப்போது அவர், வெளிப்படைத்தன்மை இல்லாததால் கொலீஜியம் கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை எனக் கூறியிருந்தார். அதேபோல் ஓய்வுக்குப் பின் எந்த ஒரு அரசுப் பணியையும் ஏற்க மாட்டேன் எனத் தெரிவித்திருந்தார். தற்போதும்கூட அவர் அந்த முடிவில் உறுதியாக இருக்கிறார்.

வருத்தமில்லை..
என்டிடிவி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த நீதிபதி செலமேஸ்வர், "உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளை முடக்கும் விவகாரங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியது மிகச் சரியானது. அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.

முக்கியமான வழக்குகள்..
நீதிபதி செலமேஸ்வரர் பதவிக்காலத்தில் பல முக்கிய வழக்குகளைக் கையாண்டிருக்கிறார். அவற்றில் சில:
1. மார்ச் 2015- செலமேஸ்வரர் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 66A-வை ரத்து செய்தது.
2. : நீதிபதிகள் நியமனத்திற்கு தேசிய சட்ட ஆணையம் அமைக்கப்படுவதை ரத்து செய்த அமர்வில் செலமேஸ்வரர் ஈடுபட்டிருந்தார். இதனால், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கவும், பதவி உயர்வு வழங்கவும் கொலிஜியம் (நீதிபதிகளை கொண்ட தேர்வுக்குழு) எனப்படும் முறை தொடர்கிறது. 

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்னதாக கண்டனத் தீர்மானம் தீர்வாகாது என வெளிப்படையாக பேட்டியளித்தவர் செலமேஸ்வர்.




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close