[X] Close
 

டெல்லியில் காணாமல்போன சிறுவன் பஞ்சாபில் மீட்பு: 6 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் இணைப்பு


in-a-movie-like-tale-missing-delhi-boy-found-in-punjab-after-6-years

  • பாரதி
  • Posted: 23 Jun, 2018 10:08 am
  • அ+ அ-

காணாமல் போன சிறுவனோ சிறுமியோ பல ஆண்டுகளுக்குப் பின் பெற்றோருடன் இணைவதுபோன்ற காட்சிகளை நாம் சினிமாவில் அதிகமாகப் பார்த்திருப்போம். ஆனால், டெல்லியில் நிஜத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

டெல்லியில் காணாமல் போன 3 வயது சிறுவன் ஒருவர் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது குடும்பத்துடன் சேர்க்கப்பட்டுள்ளார். டெல்லி லஹோரி கேட் பகுதியை ஒட்டிய குடிசைப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் கடந்த 2012 மே 21-ம் தேதி காணாமல் போனார். சிறுவனின் வசித்த குடிசைப் பகுதி ரயில் நிலையம் அருகே இருந்ததால் அந்தச் சிறுவன் அவ்வழியாக சென்ற ஏதாவது ஒரு ரயிலில் ஏறிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. காணாமல்போன சிறுவனைத் தேட குற்றப் பிரிவு ஆணையர் ஜாய் டிர்கி தலைமையில் தனிப்படை செயல்பட்டுவந்தது.

சிறுவனைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50,000 பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. 6 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்நிலையில்தான் ஜூன் 20-ம் தேதி டெல்லி போலீஸாருக்கு ஒரு தகவல் வந்தது. காணாமல் போன சிறுவன் பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் உள்ள ஹுசைன்பூரில் வசிக்கலாம் எனத் தகவல் கிட்டியது.

இதனையடுத்துச் சிறுவனின் தந்தையுடன் போலீஸ் தனிப்படை கபூர்தலா சென்றது. அங்கே சென்று பார்த்தபோது எதிர்பார்த்தபடி சிறுவன் அங்கு இருந்தார். சிறுவனின் நெற்றியில் இருந்த தழும்பைக் கொண்டு அவரது தந்தை அவரை அடையாளம் காட்டினார்.

சிறுவனைப் பராமரித்துவந்த குடும்பத்தினர் பிஹார் மாநிலம் மூங்கரைச் சேர்ந்தவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக சஞ்சய் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் உள்ளூர் ரயிலில் பயணித்திருக்கிறார். அப்போது 7 வயது சிறுவன் ஒருவன் தனியாகப் பயணிப்பதைப் பார்த்திருக்கிறார். அந்த சிறுவனிடம் அவரது குடும்பத்தைப் பற்றி சஞ்சய் விசாரித்திருக்கிறார். சிறுவனுக்கு எதையுமே சொல்லத் தெரியவில்லை.

இந்த நிலையில் சிறுவனை சஞ்சய் தங்களுடன் கூட்டிச் சென்றிருக்கிறார். ஒரு மாதம் பிஹாரில் தங்கிவிட்டு மீண்டும் பஞ்சாப் திரும்பியிருக்கிறார் சஞ்சய். அங்கேயும் அந்த சிறுவனை அழைத்துச் சென்றிருக்கிறார். சிறுவனின் பெற்றோரைக் கண்டுபிடிக்க பல முயற்சிகளையும் எடுத்துள்ளார். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. ஒருநாள் சஞ்சய்க்கு அவரது உறவுப் பெண் ஒருவர் ஃபோன் செய்தார். தான் டெல்லிக்கு வந்திருப்பதாகவும் டெல்லி ரயில் நிலையத்தில் ஒட்டப்பட்டிருந்த காணாமல் போன சிறுவனின் புகைப்படம் குறித்தும் தெரிவித்தார். இதைவைத்து சஞ்சயும் டெல்லி போலீஸாருக்கு தொடர்பு கொண்டனர். தற்போது சிறுவன் குடும்பத்துடன் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் காணாமல் போன சிறுவன் 6 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாபில் மீட்கப்பட்ட இந்த சம்பவங்கள் சினிமா பாணியில் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close