[X] Close

சமூகவலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பிய ஃபோட்டோ: மன்னிப்பு கேட்ட உ.பி., போலீஸ்


after-outrage-over-this-photo-up-police-apologise

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 Jun, 2018 15:18 pm
  • அ+ அ-

உத்தரப் பிரதேசத்தில் பசுவதை வதந்தி பரவியதால் தாக்கப்பட்ட இருவர் போலீஸ் கண் முன்னரே அந்த வன்முறை கும்பலால் இழுத்துவரப்படும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதையடுத்து உ.பி. காவல்துறை மன்னிப்பு கோரியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹப்பூர் கிராமத்தில் முஸ்லிம்கள் சிலர் பசுவதை செய்வதாக வதந்தி பரவியது. இதனையடுத்து அங்கு திரண்ட உள்ளூர்வாசிகள், காசிம் (45), சமாயுதீன் (65) என இருவரைக் கடுமையாகத் தாக்கினர். பின்னர் இருவரையுல் சாலைகளில் இழுத்துச் சென்றனர். இவர்களில் காசிம் பலியானார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் போலீஸார் கண் முன்னரே காசிம், சமாயுதீன் இழுத்துச் செல்லப்படும் ஃபோட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. உ.பி., போலீஸாருக்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், சம்பந்தப்பட்ட புகைப்படம் குறித்து போலீஸார் விளக்கமளித்துள்ளனர். டிஜிபி அலுவலகம் அளித்துள்ள விளக்கத்தில், "சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் நாங்கள் அங்கு சென்றுவிட்டோம். அந்த புகைப்படம் நாங்கள் அங்கு சென்றபோது எடுக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனம் வரவில்லை. காலதாமதமானதால் அவ்வாறு எடுத்துச் செல்ல நேர்ந்தது. களத்திலிருந்த போலீஸ்காரர்கள் இன்னும் சற்று கவனமாகவே இருந்திருக்கலாம்" எனக் கூறியுள்ளது.

காசிம் கதறி அழும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அதில் ஆடைகள் கிழிந்த நிலையில் வலியில் காசிம் கதறுகிறார். கேமராவில் தெரியாத நபர் ஒருவரின் குரல் மட்டும் கேட்கிறது. அடித்தது போதும். நிறுத்துங்கள். அவருக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள். தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் விளைவுகள் இருக்கிறது" எனக்கூறுவது பதிவாகியுள்ளது.
இந்த கொடூரமான புகைப்படமும் பதறவைக்கும் வீடியோவும் உ.பி., போலீஸார் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனையடுத்து மன்னிப்பு கோரியுள்ள உ.பி. போலீஸ், "நடந்த சம்பவத்துக்காக வருந்துகிறோம். புகைப்படத்தில் இருக்கும் 3 போலீஸாரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்த நிமிடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது. ஆம்புலன்ஸ் வாகனம் வராததால் அந்த நபர் அவ்வாறு தூக்கிச் செல்லப்படுகிறார். பதற்றத்தைக் கட்டுப்படுத்தி அந்த நபரை மீட்கும் அக்கறையில் மனிதாபிமானத்தை போலீஸார் மறந்துவிட்டனர். சற்றே கவனமாக அவர்கள் சிந்தித்திருக்கலாம். இறுதியில் போலீஸ் வாகனத்தில்தான் அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close