[X] Close

ஏடிஎம் மெஷினில் ரூ.12 லட்சத்தை ஏப்பம்விட்ட எலிகள்!


destroyed-currency-notes-dead-rodents-found-inside-assam-atm

  • பாரதி ஆனந்த்
  • Posted: 19 Jun, 2018 16:55 pm
  • அ+ அ-

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை, ஏடிஎம் இயந்திரத்தையே பெயர்த்தெடுத்து கொள்ளையடிக்க முயற்சி என்றெல்லாம் செய்திகளைப் படித்திருக்கிறோம். ஆனால், ஏடிஎம் மெஷினில் வைக்கப்பட்டிருந்த பணத்தை எலிகள் கடித்துக் குதறியதாக இதுவரை செய்தி படித்ததில்லை.

அப்படி ஒரு சம்பவம் தற்போது அசாமில் நடந்துள்ளது. அசாம் மாநிலத்தில் தீன்சுகியா மாவட்டத்தில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் ரூபாய் நோட்டுகளை எலி கடித்துக்குதறிய செய்தி இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

மே 20-ம் தேதியன்று பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மெஷின் ஒன்று பழுதாகியுள்ளது. இதனையடுத்து அந்த இயந்திரத்தை சரி செய்ய திறந்தபோது அதனுள் வைக்கப்பட்டிருந்த பணத்தில் ரூ.12.38 லட்சம் முற்றிலும் சேதமடைந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. இயந்திரத்துக்குள் நிறைய எலிகள் கிடந்ததால் ஒருவேளை எலிகள் நோட்டுக் கட்டுகளை சேதப்படுத்தியிருக்கலாம் என்று வங்கி நிர்வாகம் சார்பில் சந்தேகிக்கப்படுகிறது. அதேவேளையில் போலீஸில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. ஹிஜுகுரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளது.

தீன்சுகியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முக்தாஜோதி மஹந்தா கூறும்போது, "கடந்த மே 19-ம் தேதி எஃப்ஐஎஸ் குளோபல் சல்யூஷன்ஸ் என்ற தனியார் பாதுகாப்பு மையம் ரூ.500, ரூ.2000 கட்டுகள் அடங்கிய ரூ.29.48 லட்சத்தை ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தியுள்ளது. மே 20-ம் தேதியே இயந்திரம் வேலை செய்யவில்லை. இதனால் எஸ்பிஐ-க்கு புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏடிஎம் இயந்திரத்தை சரி செய்ய கொல்கத்தாவிலிருந்து பணியாள் அழைத்துவரப்பட்டு ஜூன் 11-ம் தேதி இயந்திரம் திறக்கப்பட்டிருக்கிறது. அப்போது இயந்திரத்தினுள் கிழிந்த நிலையில் பணக்கட்டுகள் இருந்துள்ளன.

இது குறித்து எஸ்பிஐ சார்பில், லாய்புலி பகுதி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணத்தில் ரூ.12.38 லட்சம் கிழிக்கப்பட்டிருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரத்துக்குள் எலிகள் இருந்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக நாங்கள் இன்னும் முறைப்படி வழக்கு பதிவு செய்யவில்லை ஆனால், போலீஸ் ஸ்டேஷன் டைரியில் பதிவு செய்திருக்கிறோம். புகார் எண் 246" என்றார்.

இந்த செய்தி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close