[X] Close

மலைப்பாம்புடன் செல்ஃபி: மயிரிழையில் உயிர் பிழைத்த அதிகாரி


bengal-forest-ranger-posed-with-captured-python-snake-had-other-ideas

  • பாரதி ஆனந்த்
  • Posted: 18 Jun, 2018 10:20 am
  • அ+ அ-

செல்ஃபி மோகங்களால் நிகழும் அசம்பாவிதங்கள் அன்றாடம் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. மேற்குவங்க மாநிலத்தில் ஜல்பாய்குரி மாவட்டத்தில் மலைப்பாம்பு ஒன்றை பிடித்த வனச்சரகர் அதை தனது கழுத்தில் போட்டு சுற்றி நின்றவர்களுடன் செல்ஃபி எடுக்க முயன்றபோதுதான் அந்த விபரீதம் நடந்தது.

திடீரென மலைப்பாம்பின் வால் அவரது பிடியிலிருந்து நழுவ பாம்பு அந்த வனச்சரகரின் கழுத்தை இறுக்கத் தொடங்கியது. அவர் பீதியில் அலறி ஓட பின்னால் இருந்த வனத்துறை ஊழியர் உதவி செய்தார். பின்னர் பாம்பின் பிடியிலிருந்து அவர் விலகினார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்து கிராமவாசிகள், சில விநாடிகளுக்கு தங்களது உயிர் உறைந்துபோனதாகத் தெரிவித்தனர். சிலர், வனச்சரகர் முட்டாள்தனமாக நடந்து கொண்டதாக கோபப்பட்டனர். இன்னும் சிலரோ கடைசிவரை பாம்பின் வாலை விடாமல் இறுகப்பற்றிக் கொண்ட வனச்சரகரின் தைரியத்தைப் பாராட்டினர்.

ஆனால், இந்த சம்பவத்தால் அதிருப்தி அடைந்த மேற்குவங்க வனத்துறை அமைச்சர் உரிய விளக்கமளிக்கும்படி வனச்சரகருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆபத்தை உணர வேண்டாமா?
ஜல்பாய்குரி கிராமத்தில் மலைப்பாம்பு ஒன்று சுற்றித்திரிவதக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்தத் தகவலையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்தனர்.  18 அடி நீளத்தில் 40 கிலோ எடையில் இருந்த அந்தப் பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். இதுபோல் மலைப்பாம்புகளைப் பிடிக்கும்போது அதை சாக்கு மூடையில் அடைத்து பின்னர் வனப்பகுதியில் விடுவிக்க வேண்டும். ஆனால், பாம்பைப் பிடித்த வனச்சரகர் தனது வீரத்தை பறைசாற்றுவதாக எண்ணி பாம்பை தனது கழுத்தில் போட்டார். சில விநாடிகளில் அதன் வால்பகுதி வனச்சரகர் பிடியிலிருந்து நழுவியது.

பாம்பு உடனே அந்த வனச்சரகரின் கழுத்தை இறுக்கத் தொடங்கியது. அவர் பீதியில் வாலைப் பிடிக்கவும் என்று அலற பின்னால் நின்றிருந்த இளைஞர் அதன் வாலைப் பிடிக்க விடுபடுகிறார் அந்த வனச்சரகர். 
இந்த வீடியோவைப் பார்க்கும்போது ஒரு சில விநாடிகள் வனச்சரகரின் கதை முடிந்தது என்றே நமக்குத் தோன்றும்.
ஆபத்தை உணராமல் வனத்துறை அதிகாரியே இப்படி நடந்து கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close