இவரது ஆட்டோ பிரசவத்துக்கு இலவசம்!- ஆனால் ஏன் தெரியுமா?

"உன் பிரசவத்துக்கு இலவசமா வாறேன்மா.. உன் பிள்ளைக்கொரு பேரு வச்சு தாரேன்மா..." என்ற பாடல் வரிகள் மிகப் பிரபலமான நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் பாடலில் வரும். பாட்ஷா படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடல் பிரபலமான பின்னர் தமிழகத்தில் இன்னும் அதிகமான ஆட்டோக்களில் அந்த வாசகத்தைக் காண முடிந்தது.
கர்நாடகாவில் நிஜமாகவே ஒரு ஆட்டோ ஓட்டுநர் பிரசவத்துக்கு இலவசமாக செல்கிறார். ஆனால், அவர் அப்படிச் செய்ய காரணம் ரஜினி பாடல் அல்ல. அதன் பின்னணியில் ஒரு சோகக் கதை இருக்கிறது.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் முனேசா மனகுலி. அவருக்கு வயது 42. சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர் ஆட்டோ ஓட்டுநரானார். பி.ஏ., பட்டதாரியாக இருந்தும் வேலை கிடைக்காததால் அவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றத் தொடங்கினார். தினமும் ரூ.250 ஈட்டும் மங்குலி கர்ப்பவதிகள், ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக ஆட்டோ ஓட்டுகிறார்.
பிரசவத்துக்கு இலவசம் ஏன்?
மீட்டர் கட்டணத்தை மட்டுமே வசூலிக்கும் மனகுலி கர்ப்பவதிகளை பிரசவத்திற்காக அழைத்துச் செல்லும்போது ஏன் கட்டணம் வசூலிப்பதில்லை எனக் கூறியுள்ளார். 1992-ல் கர்நாடகா மாநிலம் பசவனபாகேவாடி தாலுகாவில் நாராயணபுரா என்ற கிராமத்தில் இருந்தபோது ஆம்புலன்ஸ், ஆட்டோ என எந்த வாகனமும் கிடைக்காததால் பிரசவ வேதனையில் தவித்த பெண் ஒருவர் கண் முன்னாலேயே மரணமடைவதைப் பார்த்திருக்கிறார். இந்த சம்பவம் அவரை வெகுவாகப் பாதித்திருக்கிறது. இதன் காரணமாகவே மனகுலி ஆட்டோ ஓட்டுநர் ஆன பிறகு பிரசவத்துக்கு இலவசம் என தனது வாகனத்தில் எழுதிவைத்து கடைபிடித்து வருகிறார்.
ஒவ்வொரு நாளும் எத்தனை பேருக்கு இலவச சேவை வழங்குகிறோம் என்பதை மனகுலி குறித்து வைத்துள்ளார். அந்த வகையில், 2015 முதல் தற்போதுவரை 2000 பேருக்கு அவர் இலவசமாக ஆட்டோ ஓட்டியுள்ளார்.
முனேசாவின் சகோதரர் இறந்துவிட்டார். அண்ணன் குடும்பத்துக்காக உழைத்துவரும் முனேசா திருமணம் செய்து கொள்ளவில்லை. சொந்தமாக ஒரு ஆட்டோ வாங்க வேண்டும் என்பதுதான் முனேஸாவின் கனவு.