[X] Close

நாட்டில் 71 சதவீத முதியவர்களுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது?: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்


71

  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 15:10 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

நாட்டில் 71 சதவீத முதியவர்கள் பெற்ற பிள்ளைகளாலும், குடும்ப உறுப்பினர்களாலும், உறவினர்களாலும் கொடுமைக்கும், அவமானத்துக்கும் ஆளாகிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

வயதான காலத்தில் முதியோர்கள் பெற்ற பிள்ளைகளால் புறக்கணிக்கப்படுவதும், ஒதுக்கி வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவதும், உறவினர்களால் அவமானத்துக்கு உள்ளாக்கப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் முதியோர் இல்லங்கள் குறைவாக இருந்த நாடு தற்போது ஆதரவற்ற இல்லங்களுக்கு இணையாக முதியோர் இல்லங்களும் பெருகிவிட்டன.

அவசரத்தை தோளில் சுமந்து கொண்டு அலையும் பிள்ளைகளுக்கு தங்களின் பெற்றோர்களின் தேவைகளை காது கொடுத்து சில நிமிடங்கள் கேட்க நேரமில்லை, அவர்களுடன் நாள்தோறும் சில நிமிடங்கள் அமர்ந்து பேச பிள்ளைகளால் முடியவில்லை. வீட்டில் எந்த முடிவு எடுத்தாலும் தாய், தந்தையிடம் கலந்து பேசுவது போன்ற சூழல் இல்லை, மரியாதையின்மை சூழல்தான் நிலவுகிறது,  அவர்களின் எந்த முடிவையும், முக்கியமான விஷயங்களையும் தெரிவிக்காமல் ஒதுக்கி வைத்தலே முதல் கட்ட கொடுமையாகும்.

இந்தப் புறக்கணிப்பு ஒருகட்டத்தில் வெறுப்பாக மாறி, முதியோர்கள் கொடுமைக்கு குடும்ப உறுப்பினர்களால் ஆட்பபடுத்தப்படுகிறார்கள். இந்த சம்பவங்கள் பல நேரங்களில் வெளியே தெரியாவிட்டாலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குழந்தைகளுக்கான உரிமை எந்த அளவுக்கு முக்கியமாக இருக்கிறதோ அதே அளவுக்கு முதியோர்களுக்கான உரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், அந்த உரிமைகள் கடந்த பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு, கொடுமைக்கு ஆட்படுத்தப்படுவதால், ஜூன் 15-ம்தேதி முதியோர்கள் கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

old.jpg 

முதியோருக்கு எதிரான கொடுமைகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காக கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதியை உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாளாக ஐநா அறிவித்தது.

முதியோர் கொடுமைக்கு ஆளாவது குறித்தும், அவர்களின் உரிமைக்கு ஆதரவாகவும் ஏஜ்வெல் பவுண்டேஷன் எனும் தன்னார்வ அமைப்பு பணியாற்றி வருகிறது. அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

எங்கள் அமைப்பைச் சேர்ந்த ஏராளமானவர்கள் நாடுமுழுவதும் ஏராளமான முதியோர்களிடம் கலந்துரையாடல் செய்தார்கள். அதில், 71 சதவீதம் முதியவர்கள் பெற்ற பிள்ளைகளாலும், குடும்ப உறுப்பினர்களாலும், உறவினர்களாகும், தெரியாதவர்களாலும் எந்த விதமான காரணமும் இன்று கொடுமைக்கு ஆளாகிறார்கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள்

இந்த ஆய்வின்படி, முதியவர்களில் ஒவ்வொரு 2-வது நபரும் குடும்ப உறுப்பினர்களால், குழந்தைகளால், உறவினர்களால் கொடுமைக்கும், மோசமாகவும் நடத்தப்படுகிறார்கள்.

வயதான காலத்தில் முதியோர்களுக்கு மதிப்பளிக்காமல் அவர்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுவது அதிகரித்து பொதுவாகி வருகிறது. குடும்ப உறுப்பினர்களும், உறவினர்கள்கூட முதியோர்களிடம் அன்பாகப் பேசுவதில்லை.

அவர்களுடன் நேரம் செலவு செய்வதில்லை, தேவைகளை கவனிப்பதில்லை, அவர்களின் உணர்வுகளை மதிப்பதில்லை, குறிப்பாக கடைசி காலத்தில் பணத்துக்காகவும், பொருளாதார உதவிக்காகவும் பெற்ற பிள்ளைகளை சார்ந்திருக்கும் முதியோர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு அவமதிப்புக்கு ஆளாக்கப்படுகிறார்கள்

குடும்பத்தின் ஏழ்மை நிலை, வீடுகளில் இடவசதியின்மை, முதியோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையே புரிந்துணர்வு இல்லாமை, முதுமை நோய்கள், குழந்தைகளுக்கு நல்ஒழுக்கம் இல்லாமல் வளர்க்கப்படுதல் போன்றவை முதியோர்கள் கொடுமைக்கு காரணமாக கருதப்படுகிறது.

old33.jpg 

வயதான காலத்தில் முதியோர்களின் உடல்நிலை பாதிப்படைதல், மருத்துவ வசதி தேவைப்படுதல், உளவியல் ரீதியான சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உதவிகிடைக்காத நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். குறிப்பாக மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு போதுமான அளவில் இல்லாததும் முதியோர்கள் கொடுமைக்கு காரணமாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஜ்வெல் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் ஹிமான்ஷு ராத் கூறுகையில், " நம்முடைய வாழ்க்கையில் முதுமை என்பதை புறக்கணிக்க முடியாது. நாமும் ஒருநாள் முதுமையை நிலையை அடைவோம். அதற்காக நாம் சரியாக தயாராக வேண்டுமானால், முதியோருடன் பேசி பழகி, அவர்களின்  பிரச்சினைகளை அறிதல் அவசியம். அதேசமயம், சமூகத்தில் முதியோரின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு உண்டாக்குவது அவசரமான ஒன்றாக இருக்கிறது " எனத் தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close