[X] Close

அர்ஜென்டினா டி-ஷர்ட்டில் கேரள அமைச்சர்: இந்தியாவும் கால்பந்து மீதான காதலும்


jersey-with-lungi-to-private-stadium-football-world-cup-fans-go-all-in

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Jun, 2018 13:33 pm
  • அ+ அ-

இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதமாக இருக்கலாம் ஆனால் கால்பந்து ஒரு வாழ்வியல் முறையாகவே இருக்கிறது. அதுவும் குறிப்பாக கொல்கத்தாவும் கேரளாவும் வடகிழக்கு மாநிலங்களும் கொண்டாடும் அளவுக்கு கால்பந்து விளையாட்டை வேறு யாரும் கொண்டாடுவதில்லை.

கால்பந்து உலகக்கோப்பை திருவிழாவை இந்தியர்கள் எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள் என்ற பார்வைதான் இந்த செய்தி.

கேரள மாநில மின் துறை அமைச்சர் எம்.எம்.மணி தனது ட்விட்டர் பக்கத்தில் #Vamos Argentina என்ற ஹேஷ்டேக் கீழ் தனது புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அவர் அணிந்திருந்த டிஷர்ட் அர்ஜென்டினா நாட்டுக் கொடி. கையில் ஒரு கால்பந்தையும் வைத்திருந்தார். வேஷ்டி அணிந்து அவர் கால்பந்துடன் நின்றிருக்கும் அந்தப் புகைப்படத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் போரா என்ற நபர் வங்கிக் கடனாக ரூ.13 லட்சம் பெற்றிருக்கிறார். தொழிலை விரிவுபடுத்த அல்ல ஒரு ஆடிட்டோரியம் கட்ட. அந்த ஆடிட்டோரியத்திலிருந்து 2018 உலகக்கோப்பை போட்டிகளை பெரிய திரைகளில் நேரலையாக விசிறிகளுக்கு ஒளிபரப்ப வேண்டும் என்பதே அவரது கனவு. 57 வயதில் வங்கிக் கடன் வாங்கி அவர் ஆடிட்டோரியம் கட்ட கால்பந்து மீதான காதலைத் தவிர வேறு என்ன காரணமாக இருக்க முடியும். தனது ஸ்டேடியத்துக்கு தி ஜெர்மன் ஸ்டேடியம் என்று பெயரும் வைத்திருக்கிறார். இந்த அரங்கில் ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து போட்டியைக் கண்டு களிக்கலாம். 53 இன்ச் திரையில் விளையாட்டைப் பார்க்கலாம்.

இது ஒருபுறம் இருக்க புகழ்பெற்ற மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டைக் கொண்டாடும் வகையில் 6 டன் மணல் கொண்டு ஒரு சிற்பத்தை வடிவமைத்திருக்கிறார்.

ஒடிசாவின் நுண்பொருள் கலைஞர் எல்.ஈஸ்வர் ராவ், பென்சில்கள், கிரேயான்கள் கொண்டு ஃபிபா உலகக் கோப்பை மாதிரியை வடிவமைத்திருக்கிறார்.

மேற்குவங்கத்தைச் சேர்ந்த டீ வியாபாரி ஒருவர் தனது டீக்கடைக்கும் வீட்டுக்கும் அர்ஜென்டினா நாட்டுக் கொடியைப் போல் வண்ணம் பூசியிருக்கிறார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த அஜித் தத்தா என்ற பட்டம் செய்பவர் தனது பட்டங்களில் ஃபிபா உலகக்கோப்பை படத்துடனும் பங்கேற்கும் நாடுகளின் கொடிகளின் படத்துடனும் பட்டத்தைத் தயாரித்து வருகிறார்.

இப்படியாக நாடு முழுவதும் கால்பந்து ரசிகர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தி வருகின்றனர். 

ஃபிபா உலகக்கோப்பை 2018 போட்டிகள் ஜூன் 14 தொடங்கி ஜூலை 15 வரை நடைபெறுகிறது. 32 அணிகள் பங்கேற்கின்றன. 736 வீரர்கள் களம் காண்கின்றனர். ஜூலை 15-ம் தேதியன்று இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close