[X] Close

‘வாயு’ புயல் பாதிப்பில் இருந்து தப்பியது குஜராத்: கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 08:13 am
  • அ+ அ-

வாயு புயலின் திசை மாறியதால் பெரும் பாதிப்பில் இருந்து குஜராத் தப்பியுள்ளது. எனினும், அந்த மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

அரபிக் கடலில் உருவான வாயு புயல் நேற்று பிற்பகல் குஜராத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் புயல் திசை மாறி மீண்டும் கடலுக்கு திரும்பியதால் பெரும் பாதிப்பில் இருந்து குஜராத் தப்பியுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மைய ஆய்வாளர் மனோரமா மொகந்தி கூறியபோது, "வாயு புயல், அதிதீவிர புயலாகும். இது குஜராத்தில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் புயல் திசை மாறி வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து செல்கிறது. குஜராத்தின் போர்பந்தர், துவாரகா, வெரவா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். வரும் 15-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்" என்று தெரிவித்தார்.

குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதிகளில் வசிக்கும் சுமார் 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. குஜராத் முழுவதும் நேற்று 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. போர்பந்தர், டையூ, பாவ்நகர், கேசாத், கண்ட்லா விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் 400-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 52 குழுக்கள் குஜராத்தில் முகாமிட்டுள்ளன. கடலோர காவல் படையும் முப்படைகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஐஎன்எஸ் சென்னை, ஐஎன்எஸ் கோமதி, ஐஎன்எஸ் தீபக் கப்பல்களில் குஜராத்துக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் கடற்படையை சேர்ந்த 7 விமானங்களும் 3 ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

போர் பந்தர் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 35 படகுகளை ராட்சத அலைகள் இழுத்துச் சென்றன. கடலோர மாவட்டங்களில் சுமார் 600-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பிரதமர் உறுதிகுஜராத் முதல்வர் விஜய் ரூபானி நேற்று மூத்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், மீட்புப் படையினருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடி முதல்வர் விஜய் ரூபானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது குஜராத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதியளித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close