[X] Close

திருப்பதி சென்ற செங்கல்பட்டு பக்தர்கள் மீது தேவஸ்தான அதிகாரிகள் தாக்குதல்


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 08:07 am
  • அ+ அ-

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்ற செங்கல்பட்டை சேர்ந்த பக்தர்கள் மீது தேஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் உள்ள மலையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 50 பக்தர்கள், ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருப்பதிக்கு நேற்று பேருந்தில் சென்றனர். பின்னர், மலை அடிவாரத்துக்கு வந்த பிறகு, கோயிலுக்கு செல்வதற்காக ஆந்திர அரசு பேருந்தில் ஏறி அவர்கள் பயணித்தனர்.அலிபிரி சோதனைச்சாவடி அருகே வந்த போது,  பேருந்தில் இருந்த பயணிகளிடம் தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் சிறப்புப் படையினர் சோதனை செய்தனர்.

அப்போது, செங்கல்பட்டை சேர்ந்த 2 பேரிடம் புகையிலை பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், திருப்பதிக்கு செல்லும்போது புகையிலை பொருட்களை கொண்டு செல்லக் கூடாது என்பது தெரியாதா எனக் கேட்டுள்ளனர்.அதற்கு அவர்கள், இதுகுறித்து தங்களுக்கு தெரியாது எனக் கூறியுள்ளனர். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருகட்டத்தில், பக்தர்கள் சிலரை தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள் தாக்கியுள்ளனர். மேலும், பக்தர்கள் மீது கஞ்சா வழக்கு போடப் போவதாகவும் கூறி தேவஸ்தான அதிகாரிகள் மிரட்டியதாக தெரிகிறது.

இந்நிலையில், அங்கு வந்த தேவஸ்தான உதவி கண்காணிப்பு அதிகாரி சுரேந்தர் ரெட்டி, இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினார்.

பின்னர், அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இந்த விவகாரம் தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். முதல்கட்ட விசாரணையில், தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள் மீது பக்தர்கள்தான் தாக்குதல் நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இது நிரூபணமானால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close