[X] Close

ஆந்திர எம்எல்ஏ ஸ்ரீதர் ரெட்டி ஜெகன் சாட்சியாக என பதவிப் பிரமாணம்


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 08:20 am
  • அ+ அ-

நடந்து முடிந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 30-ம் தேதி ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து 25 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு முதல் சட்டப்பேரவை கூட்டம் அமராவதியில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஜெகன் உட்பட புதிய எம்எல்ஏக்கள் 173 பேர் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் அப்பல் நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது ஆளும் கட்சியின் நெல்லூர் தொகுதி எம்எல்ஏ ஸ்ரீதர் ரெட்டி, அதிக ஆர்வம் காரணமாக முதல்வர் ஜெகன் சாட்சியாக என்று பதவிப் பிரமாணம் வாசித்தார். இதை தற்காலிக சபாநாயகர் அப்பல் நாயுடு ஏற்கவில்லை. இதையடுத்து கடவுள் சாட்சியாக என்று கூறி ஸ்ரீதர் ரெட்டி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

சபாநாயகர் தேர்தல்

இதனிடையே புதிய சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஆயுதால வலசா தொகுதி எம்எல்ஏ தம்மிநேனி சீத்தாராமை தேர்வு செய்வது என முதல்வர் ஜெகன் முடிவு செய்தார். சீத்தாராம் நேற்று மதியம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரது மனுவை ஆளும் கட்சியின் 30 எம்எல்ஏக்கள் வழிமொழிந்தனர். இதனால் இவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, புதிய சபாநாயகராக பதவியேற்க உள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close