[X] Close

ஒரு சமையல் கலைஞருக்கு அன்பைப் பரிமாறிய முஸ்லிம் குடும்பம்


chef-vikas-khanna-reunites-with-muslim-family-who-saved-him-in-1992-mumbai-riots

  • பாரதி ஆனந்த்
  • Posted: 14 Jun, 2018 15:54 pm
  • அ+ அ-

செஃப் விகாஸ் கன்னா. இவரைத் தெரியாதவர் இருக்க முடியாது. இந்திய - அமெரிக்கரான இவர் பிரபலமான சமையற் கலைஞர். அண்மையில் இவர் பாலிவுட் பிரபலம் அனுபம் கேருக்கு அளித்தப் பேட்டியில், 1992-ல் மும்பை கலவரத்தின்போது தன்னை ஒரு முஸ்லிம் குடும்பத்தினர் காப்பாற்றி அடைக்கலம் கொடுத்தது குறித்து கூறியிருந்தார்.

இந்நிலையில், 26 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குடும்பத்தினரை சந்திக்கிறார் விகாஸ். இக்பால் கானையும் வாசிம் பாயையும் 26 ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கப்போகிறேன் என அவர் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

விகாஸ் உயிர் பிழைத்த கதை..
1992 மும்பையில் திடீரென மதக் கலவரம் ஏற்பட்டடது. அப்போது விகாஸ் கன்னா, ஸீ ராக் ஷெராட்டன் ஓட்டலில் பணிபுரிந்து கொண்டிருந்தார். கலவரம் குறித்த தகவல் அவருக்கு தெரிந்ததும் பதற்றமானார். காரணம் அவரது சகோதரர் வசித்துவந்த கட்கோபர் பகுதி வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. எனவே அவர் கட்கோபருக்கு செல்ல முடிவு செய்தார். கட்கோபருக்கு ஒருவழியாக சென்றும்விட்டார். ஆனால், உள்ளே நுழைந்தவுடன் அவரை ஒரு முஸ்லிம் குடும்பம் தடுத்து நிறுத்தி வீட்டுக்குள் அழைத்துச் சென்றது. அவருக்கு ஏதும் புரியவில்லை. சில நிமிடங்களில் அந்த வீட்டுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று வீட்டினுள் இருக்கும் விகாஸைக் காட்டி இவர் யார் எனக் கேட்டது. அப்போது அந்தக் குடும்பத்தினர் சிறிதும் தயங்காமல் விகாஸ் தங்கள் மகன் எனக் கூறினர். விகாஸ் ஒருவழியாக அன்று உயிர் பிழைத்தார்.

அதன்பின்னர் விகாஸ் அமெரிக்கா சென்றுவிட்டார். அந்தக் குடும்பத்துடனான தொடர்பு தடைபட்டுவிட்டது. இருந்தலும் ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் விகாஸ் கன்னா ஒருநாள் உபவாசம் இருப்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளார். அன்றைய தினம் தனது உயிரைக் காத்த குடும்பத்தினர் நலமுடன் வாழ வேண்டி அவர் நோன்பு இருக்கிறார்.
இந்நிலையில்தான் அண்மையில் விகாஸ் ஒரு ட்வீட்டைப் பகிர்ந்திருந்தார். 26 ஆண்டுகளுக்குப் பிறகு தனது உயிர்காத்த இக்பால் கானையும் வாசிம் பாயையும் 26 ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கப்போகிறேன் என அவர் பதிவிட்டிருந்தார்.

ஒரு சமையல் கலைஞருக்கு அன்பைப் பரிமாறிய முஸ்லிம் குடும்பமும் அந்தக் குடும்பத்துக்காக ரம்ஜான் மாதத்தில் ஒரு நாள் நோன்பு இருக்கும் அன்பும்தான் இந்த உலகத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் நன்மைகளுள் ஒன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close