[X] Close

பஞ்சாப் முதல்வருடன் மோதல்: ராகுலுடன் நவ்ஜோத் சிங் சித்து சந்திப்பு


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 07:28 am
  • அ+ அ-

பஞ்சாப் முதல்வராக கேப்டன் அமரிந்தர் சிங் உள்ளார். இவரது அமைச்சரவையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து இடம்பெற்றுள்ளார். உள்ளாட்சி, சுற்றுலா மற்றும் கலாச்சார விவகாரங்கள் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

எனினும், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில் உள்ள 13-ல் 8 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து, உள்ளாட்சித் துறையின் மோசமான செயல்பாடுகளால்தான் மக்களவைத் தேர்தலில் நகர்ப்புற தொகுதிகளில் காங்கிரஸ் தோற்றது என முதல்வர் வெளிப்படையாக சித்து மீது குற்றம்சாட்டினார். இதன்மூலம் இவர்களுக்கிடையிலான மோதல் வெளிச்சத்துக்கு வந்தது. இந்நிலையில், பஞ்சாப் அமைச்சரவை கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இதை சித்து புறக்கணித்தார்.

இதனிடையே, அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்தார் முதல்வர் அமரிந்தர் சிங். குறிப்பாக, சித்துவிடமிருந்த உள்ளாட்சி, சுற்றுலாத் துறையை பறித்துவிட்டு, மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையை ஒதுக்கினார். இந்த சூழ்நிலையில்தான் நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மற்றும் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை ட்விட்டரில் சித்து வெளியிட்டுள்ளார். மேலும், “ராகுலை சந்தித்தேன். மாநில நிலவரம் குறித்த விளக்க கடிதத்தையும் அவரிடம் வழங்கி உள்ளேன்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close