[X] Close

அரசியல் வியூகங்கள் வகுப்பதில் அமித் ஷா முதல்வர்; பிரசாந்த் கிஷோர் மாணவர்: பாஜக பொதுச்செயலாளர் விஜய் வர்கியா கருத்து


  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 10:52 am
  • அ+ அ-

இந்திய அரசியல் கல்லூரியில் பிரசாந்த் கிஷோர் மாணவர் என்றால் அந்த கல்லூரிக்கு அமித் ஷா முதல்வர் என்று பாஜக பொதுச்செயலாளர் விஜய் வர்கியா தெரிவித்துள்ளார்.

தேர்தல் வித்தகர் என்றழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர், ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் ஆலோசகராக உள்ளார். அவர் வகுத்து கொடுத்த தேர்தல் வியூகங்களால் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று அதன் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றுள்ளார்.

மேற்குவங்கத்தில் வரும் 2021-ம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரசாந்த் கிஷோர், திரிணமூல் காங்கிரஸின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜியை சில நாட்களுக்கு முன்பு கிஷோர் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து பாஜக பொதுச்செயலாளர் விஜய் வர்கியா கூறியதாவது:முதல்வர் மம்தா பானர்ஜி மீது மக்கள் நம்பிக்கையிழந்துவிட்டனர்.

அவரை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டனர். இதை உணர்த்தும் வகையில் மக்களவைத் தேர்தலில் மக்கள் மிகத் தெளிவாக தீர்ப்பளித்துள்ளனர். எந்தவொரு தேர்தல் வித்தகராலும் நிலைமையை மாற்ற முடியாது.

இந்திய அரசியல் கல்லூரியில் பிரசாந்த் கிஷோர் மாணவர் என்றால் அந்த கல்லூரிக்கு அமித் ஷா முதல்வர். பிரசாந்த் கிஷோர் குறித்து பாஜக கவலைப்படவில்லை. அரசியல் வியூகம் வகுப்பதில் அமித் ஷா அளவுக்கு பிரசாந்த் கிஷோர் இல்லை.

இவ்வாறு விஜய் வர்கியா தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close