[X] Close

பிஹார் தவிர மற்ற மாநிலங்களில் தனித்துப்போட்டி: ஐக்கிய ஜனதாதளம் அறிவிப்பு


  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 09:46 am
  • அ+ அ-

பிஹாரில் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி மற்ற மாநிலங்களில் தனித்து போட்டியிடுவது என்றும் ஐக்கிய ஜனதாதள கட்சி அறிவித்துள்ளது.

மத்தியில் பாஜக அரசு 2வது முறையாக பதவியேற்ற பின் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்க முன் வந்தது. ஆனால் தங்களுக்கு கூடுதல் அமைச்சர் பதவி வேண்டும் என வலியுறுத்திய ஐக்கிய ஜனதாதள கட்சி அமைச்சரவையில் சேர மறுத்து விட்டது.

இந்நிலையில், பாட்னாவில், ஐக்கிய ஜனதாதளத்தின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. நிதிஷ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிவடைந்த பிறகு, கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.தியாகி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அருணாசல பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 7 இடங்களை பிடித்து மாநிலத்தில் இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பிடித்துள்ளோம்.

கட்சிக்கு தேசிய அங்கீகாரம் பெறும் வகையில் டெல்லி, ஹரியாணா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல்களில் தனித்து போட்டியிடுவோம்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் இடம் பெறுவதில்லை என்ற முடிவில் மாற்றம் இல்லை. இதனை பாஜக தலைவர்களிடம் ஏற்கெனவே தெரிவித்து விட்டோம். எனினும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உறுதியாக இருப்போம். பிஹாரில் பாஜகவுடன் எங்கள் கூட்டணி தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close