[X] Close

காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்கத் தயார்: ராகுலுக்கு அஸ்லம் ஷேர் கான் கடிதம்


  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 09:57 am
  • அ+ அ-

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ள நிலையில், அந்தப் பதவியை ஏற்கத் தயார் என முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்லம் ஷேர் கான் ராகுலுக்கு கடிதம் எழுதி உள்ளார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து கடந்த மே 25-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்தார். ஆனால், செயற்குழு இதை ஏற்கவில்லை. கட்சியின் மூத்த தலைவர்களும் கூட்டணி கட்சித் தலைவர்களும் ராகுல் தலைவராக நீடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருந்தபோதிலும், ராகுல் தனது முடிவில் உறுதியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் 1975-ல் மலேசியாவில் நடந்த உலகக் கோப்பை ஹாக்கியில் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றவருமான அஸ்லம் ஷேர் கான் ராகுலுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், “காங்கிரஸ் கட்சிக்கு சேவை ஆற்ற நான் விரும்புகிறேன்.

2 ஆண்டுகளுக்கு மட்டும் தற்காலிகமாக கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்கத் தயாராக உள்ளேன். ஹாக்கி வீரராக என்னுடைய திறமையை வெளிப்படுத்தி உள்ளேன். குறிப்பாக 1975 உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இக்கட்டான நேரத்தில் இருந்த இந்திய அணி, கோப்பையை வெல்ல காரணமாக இருந்தேன்.

எனவே, என் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பை ஒப்படைத்தால், 2 ஆண்டுகளில் கட்சியின் வளர்ச்சிக்காக தீவிரமாக பாடுபடுவேன் என உறுதி அளிக்கிறேன். நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் மவுனமாக இருந்து வரும் நிலையில், கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்கத் தயார் என அறிவித்த முதல் நபர் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close