[X] Close

ஓய்வு பெறுகிறார் அஸிம் பிரேம்ஜி


  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 08:36 am
  • அ+ அ-

விப்ரோ நிறுவனத்தின் தலைவரும் அதன் நிறுவனருமான அஸிம் ஹெச் பிரேம்ஜி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது பதவிக் காலம் ஜூலை மாதத்துடன் நிறைவுபெறுகிறது. அத்துடன் பணியிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

ஜூலை 30-ம் தேதியுடன் அவர் விப்ரோ நிறுவனத்தில் பொறுப்பேற்று 53 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அவரது மூத்த மகனும் நிறுவனத்தின் தலைமை உத்தி பிரிவின் தலைவருமான ரிஷாத் பிரேம்ஜி, ஜூலை 31-ம் தேதி முதல்நிறுவனத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்பார்.

பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும் நிறுவனத்தின் நிறுவனர் தலைவராகவும், இயக்குநர் குழுவில் பொறுப்புகள் ஏதுமில்லாத இயக்குநராகவும் அவர் தொடர்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தில் தற்போது தலைமைச் செயல் அதிகாரி மற்றும் செயல் இயக்குநராக உள்ள அபித்அலி நீமுச்வாலாவுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக ஜூலை 31-ம் தேதி முதல் செயல்படுவார் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

73 வயதாகும் அஸிம் பிரேம்ஜி தனது சொத்துகளில் மூன்றில் இரண்டு பங்கை அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

தந்தை மறைவுக்குப் பிறகு ஸ்டான்போர்டு பல்கலை படிப்பை பாதியில் விட்டுவிட்டு 1966-ம் ஆண்டு தனது 21-வது வயதில் விப்ரோவில் பொறுப்பேற்றவர் அஸிம். இவர் பொறுப்பேற்றபோது நிறுவனத்தின் மொத்த வருமானம் 20 லட்சம் டாலராக இருந்தது. தற்போது நிறுவனத்தின் வருமானம் 1,100 கோடி டாலராக உயர்ந்துள்ளது. 2000-வது ஆண்டில் தான் பாதியில் கைவிட்ட ஸ்டான்போர்டு படிப்பை தபால் வழிக் கல்வி மூலம் படித்து முடித்தவர். பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகளைப் பெற்றவர். நிறுவனத்தில் இவருக்கு 34 சதவீத பங்கு உள்ளது.

கடந்த மார்ச் மாதம் தனது அறக்கட்டளைக்கு ரூ.52,750 கோடியை அளித்தவர். ஓய்வு பெறும் முடிவை எடுத்த பிறகு நிறுவன ஊழியர்களுக்கு இணையதளம் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார் அஸிம் பிரேம்ஜி. புதிய பொறுப்புக்கு வந்துள்ளவர்கள் விவரத்தை பட்டிய லிட்டு, நிறுவனம் மிகச் சிறந்த எதிர்காலத்தை எட்டும் என அந்த மின்னஞ்சலில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1966-ம் ஆண்டு விப்ரோ நிறுவனத்தில் பொறுப்பேற்றதிலிருந்து நிறுவனம் மிகச் சிறந்த இடத்தை எட்டுவதில் ஊழியர்களின் பங்களிப்பு இருந்துள்ளதையும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். தாவர எண்ணெய் வர்த்தகத்தில் இருந்த விப்ரோ நிறுவனம் இன்று பன்முகத் தொழிலில் சர்வதேச அளவில் சிறப்பிடம் பெற்று விளங்குவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தலைமுறைகளை தாண்டி ஊழியர்கள் நிறுவனத்தில் செலுத்திய கடின உழைப்புதான் நிறுவன வளர்ச்சிக்கு பிரதானமாக அமைந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விப்ரோ வெற்றிகரமான நிறுவனம் மட்டுமின்றி சமூக பொறுப்புள்ள நிறுவனமாகவும், நேர்மையான நிறுவனமாகவும் வளர்ந்து பிற நிறுவனங்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்வதையும் அவர் பாராட்டியுள்ளார். ஊழியர்களின் இத்தகைய ஈடு இணையற்ற கடின உழைப்பும் எதிர்காலத்திலும் தொடரும் என நம்புவதாக ஊழியர்களுக்கு அனுப்பிய இ-மெயில் கடிதத்தில் பிரேம்ஜி குறிப்பிட்டுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close