[X] Close

நாடு முழுவதும் மக்களிடையே பிரதமர் மோடி பரப்பிவரும் வெறுப்பை அன்பால் எதிர்கொள்வோம்; வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவித்து ராகுல் காந்தி பேச்சு


  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 08:09 am
  • அ+ அ-

நாடு முழுவதும் மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி வெறுப்பை பரப்பி வருகிறார். பாசத்தாலும், அன்பாலும் அதை எதிர்கொள்வோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். அமேதி தொகுதியில் தோல்வி கண்ட ராகுல், வயநாட்டில் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியைப் பெற்றார்.

இந்நிலையில் நேற்று அவர் வயநாடு மக்களவைத் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வருகை தந்தார். மலப்புரம் மாவட்டம் களிக்காவு பகுதியில் திறந்த வாகனத்தில் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி வலம் வந்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

என் மீது நம்பிக்கையும், பாசமும் வைத்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த தொகுதி மக்களுக்கு என் நன்றிகள்.

மக்களிடையே வெறுப்பு உணர்வை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பரப்பி வருகிறது. அதை அன்பாலும், பாசத்தாலும் எப்படி எதிர்த்துப் போராடுவது என்பதை காங்கிரஸ் கட்சி புரிந்து வைத்துள்ளது. பிரதமர் மோடியின் கொள்கைகளாலும், மோடியாலும் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பது என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது.

வயநாடு மக்களின் பிரச்சினைகளுக்காக மக்களவைக்கு உள்ளேயும், வெளியேயும் குலர் கொடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

களிக்காவு பகுதியில் அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. ஆனால் பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் ராகுலைக் காண பொதுமக்கள் திரண்டிருந்தனர். பல்வேறு இடங்களில் ராகுல் காந்தி படத்துடன் கூடிய போஸ்டரில் “நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. மொத்தம் 3 நாட்கள் கேரளாவில் தங்கும் ராகுல் காந்தி வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கவுள்ளார்.

 - பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close