[X] Close

கேரளாவில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 6 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை


6

  • kamadenu
  • Posted: 07 Jun, 2019 10:42 am
  • அ+ அ-

கேரளாவில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 6 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, கொச்சியில் உள்ள கலமச்சேரி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, அந்தக் கல்லூரி மாணவருடன் கொச்சியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்துகொண்ட 314 பேருக்கும் அதே மருத்துவமனையில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அவர்களில் 6 பேருக்கு சில நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால் அவர்களுக்கும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்பட்டது. இந்த 6 பேரில், அந்த மாணவருக்கு சிகிச்சை அளித்த 3 செவிலியர்களும் அடங்குவர்.

இதனைத் தொடர்ந்து, அவர்களின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அந்த ஆய்வு முடிவில் 6 பேருக்கும் சாதாரண காய்ச்சலே ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நிபா வைரஸ் பீதி ஓரளவுக்கு குறைந்துள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. சைலஜா கூறுகையில், “காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 பேருக்கும் நிபா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது. இது கேரள அரசுக்கு மிகப்பெரிய ஆறுதலை தந்துள்ளது. மேலும், மக்கள் மத்தியில் நிபா வைரஸ் குறித்த பீதியையும் குறைத்துள்ளது” என்றார்.- பிடிஐ

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close