[X] Close

மத்திய அரசில் மோடிக்கு அடுத்து அமித் ஷாவுக்கு கூடுதல் முக்கியத்துவம்: 8 அமைச்சரவைக் குழுக்களில் இடம்


8

  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 10:53 am
  • அ+ அ-

மத்திய அமைச்சர்கள் இடம் பெற்றுள்ள 8 அமைச்சரவைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் எட்டுக்குழுக்களிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரதமர் மோடிக்கு பிறகு அமைச்சரவையில் அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமராக 2-ம் முறையாக பதவியேற்ற மோடி மத்திய அரசில் 8 அமைச்சரவைக் குழுக்களை மாற்றி அமைத்துள்ளார். இதன்படி நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு, வீட்டு வசதி அமைச்சரவை குழு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழு, முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவைக் குழு, வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாட்டு அமைச்சரவைக் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இதில், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்காக பிரதமர் நரேந்திர மோடி தனது தலைமையில் இரண்டு புதிய அமைச்சரவைக் குழுக்களை ஏற்படுத்தியுள்ளார்.நாட்டில் பொருளாதார தேக்க நிலையும் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பும் ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இந்த அமைச்சரவைக் குழுக்களில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் தவிர, வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், பெட்ரோலியம் மற் றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், திறன் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, தொழிலாளர் நலத் துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

எனினும் 8 குழுக்களிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் பிரதமர் மோடிக்கு பிறகு அமைச்சரவையில் அதிக முக்கியத்துவம் பெற்ற அமைச்சராக அவர் உருவெடுத்துள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 குழுக்களில் மட்டும்  இடம் பெற்றுள்ளார். நிர்மலா சீதாராமன் 7 குழுக்களிலும், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் 5 குழுக்களிலும் இடம் பெற்றுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close