[X] Close

24 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்க ரூ.17,500 கோடியில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம்: கடற்படையை நவீனப்படுத்த மத்திய அரசு திட்டம்


24-17-500

  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 10:01 am
  • அ+ அ-

கடற்படையை நவீனப்படுத்துவதற்காக, ரூ.17,500 கோடி மதிப்பில் 24 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து, நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராகவும் பாதுகாப்புத் துறை அமைச்சராக ராஜ்நாத் சிங்கும் பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில் நீர்மூழ்கி கப்பல் தகர்ப்புக்கான போர் திறன் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த கடற்படை திட்டமிட்டுள்ளது.

இதற்காக அமெரிக்காவிடமிருந்து ரூ.17,500 கோடி மதிப்பில் லாக்ஹீட் மார்ட்டின்-சிகோர்ஸ்கி எம்எச்-60ஆர் ரக ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரட்டை இன்ஜின்களைக் கொண்ட இந்த ஹெலிகாப்டர்களில் ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் இடம்பெற்றிருக்கும். போர்க்கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களில் இருந்து இந்த ஹெலிகாப்டர்களை இயக்கலாம். அமெரிக்க அரசின் வெளிநாட்டு ராணுவ விற்பனை திட்டத்தின் கீழ் இந்த ஹெலிகாப்டர்கள் வாங்கப்படும். இருநாட்டு அரசுகளும் இந்த ஒப்பந்தத்தில் நேரடியாக ஈடுபடும்.

இதுகுறித்து மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “24 எம்எச்-60ஆர் ரக ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தான 18-வது மாதத்தில் ஹெலிகாப்டர் சப்ளை தொடங்கும். 2022-க்குள் அனைத்து ஹெலிகாப்டர்களும் கிடைத்துவிடும். இதன் மூலம் கடற்படையின் பலம் அதிகரிக்கும்” என்றார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close