[X] Close

தமிழகத்துக்கு நீர் திறப்பது எப்போது? - அணைகளில் காவிரி ஆணைய குழு ஆய்வு


  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 09:35 am
  • அ+ அ-

-இரா.வினோத்

அண்மையில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதத்தில் வழங்க வேண்டிய காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 9.19 டிஎம்சி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது.

இதற்கு கர்நாடக அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைக் கண்டித்து மைசூரு, மண்டியா ஆகிய மாவட்டங்களில் விவசாய சங்கத்தினரும், கன்னட அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் குடிநீருக்கே போதிய நீர் இல்லாதபோது, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என போர்க்கொடி தூக்கினர்.

இந்நிலையில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், ‘‘கர்நாடக மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுவதால் காவிரியின் குறுக்கேயுள்ள அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை. கிருஷ்ணராஜசாகர் அணையில் தற்போது இருக்கும் 14 டிஎம்சி நீரைக் கொண்டே அடுத்த 3 மாதங்களுக்கு பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. எனவே காவிரி மேலாண்மை ஆணையம் அணைகளின் நீர் இருப்பை ஆய்வு செய்து அதற்கேற்றவாறு முடிவெடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவில் அங்கம் வகிக்கும் கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் பெங்களூரு வந்தனர். மண்டியா மாவட்டத்தில் காவிரியின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு சென்று தற்போதைய நீர் இருப்பு, நீர்வரத்து, வெளியேற்றம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர்.

இதையடுத்து மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி, குடகில் உள்ள ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளையும் ஆய்வு செய்தனர். நீரின் அளவை கணக்கிடும் பணிகள் நிறைவடையாததால் இன்றும் (வியாழக்கிழமை) ஆய்வு பணியை தொடர உள்ளனர். கர்நாடக அணைகளின் நீரை கணக்கிட்டு, அதுகுறித்து அடுத்த வாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். அதன் பிறகே தமிழகத்துக்கு காவிரி நீரை திறப்பது குறித்து கர்நாடகா முடிவெடுக்கும் என கூறப்படுகிறது.

இதனால் ஜூன் முதல் வாரத்தில் குறுவை சாகுபடிக்காக தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close