[X] Close
 

கௌரவக் கொலை செய்யப்பட்டவரின் குடும்பம் அளித்த இஃப்தார் விருந்து: டெல்லியில் நடந்த நெகிழ்ச்சியான நிகழ்ச்சி


ankit-saxena-iftar-party

அங்கித் வீட்டில் நடந்த இஃப்தார் விருந்து

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 04 Jun, 2018 16:01 pm
  • அ+ அ-

டெல்லியைச் சேர்ந்த அங்கித் சக்சேனா என்பவர், அவர் காதலித்த பெண்ணின் குடும்பத்தாரால் ஐந்து மாதங்களுக்கு முன்னாள் கொலை செய்யப்பட்டார். தற்போது அங்கித்தின் குடும்பத்தினர் அமைதி வேண்டி இஃப்தார் விருந்தளித்துள்ளனர்.

24 வயதான அங்கித் சக்ஸேனா ஒரு புகைப்படக் கலைஞர். ஷெஸாதி என்ற இஸ்லாமியப் பெண்ணைக் காதலித்து வந்தார். இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஷெஸாதியின் குடும்பத்தாராலேயே பிப்ரவரி 1ஆம் தேதி அன்று அங்கித் கொலை செய்யப்பட்டார். அங்கித்தின் வீட்டுக்கு அருகாமையிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றது. 

இந்தக் கொலையைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பதட்டம் நிலவியது. ஆனால் அங்கித்தின் குடும்பத்தினர் இந்தக் கொலையை மதச் சண்டையாக மாற்ற வேண்டாம் என்று கோரினர். தொடர்ந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
தற்போது 4 மாதங்கள் கழித்து, அமைதி வேண்டி, அங்கித்தின் குடும்பத்தினர் தங்கள் பகுதியில் இஃப்தார் விருந்தளித்துள்ளனர். 

அங்கித் சக்சேனா பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அறக்கட்டளை சார்பாக, எந்த அரசியல் கட்சிகளின் தலையீடும் இல்லாமல், அங்கித்தின் வீட்டிலேயே இந்த விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

இது குறித்து பேசிய அங்கித்தின் தந்தை யஷ்பால், "நாங்கள் எதிர்பாராத வகையில் இந்த விருந்துக்கு மிகப்பெரிய வரவேற்பு அனைத்து தரப்பினரிடமிருந்தும் கிடைத்தது. எங்கள் பகுதி மக்கள் முன், இஃப்தார் விருந்து பற்றிய யோசனையைச் சொன்னவுடன், எல்லா மத நம்பிக்கையைச் சேர்ந்தவர்களும் இதை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் உதவ முன்வந்தது ஆச்சரியமளித்தது. 

எங்கள் எண்ணம் ஒன்றுதான். எங்களுக்கு நாங்கள் வாழும் பகுதியில் அமைதி வேண்டும். எனக்கு எந்த மத நம்பிக்கையைச் சேர்ந்தவர்கள் மீதும் காழ்ப்புணர்ச்சி இல்லை. தொடர்ந்து இந்த அறக்கட்டளை சார்பாக விநாயக சதுர்த்தி, நவராத்திரி போன்ற பண்டிகைகளும் கொண்டாடப்படும்" என்றார். 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close