[X] Close

காலா ரிலீஸுக்கும் காவிரி நீர் பிரச்சினைக்கும் என்ன தொடர்பு?- பிரகாஷ் ராஜ் காட்டம்


whats-kaala-got-to-do-with-cauvery-prakash-raj

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Jun, 2018 10:13 am
  • அ+ அ-

கர்நாடகாவில் காலா திரைப்படம் வெளியிட கன்னட அமைப்புகள் எதிர்ப்புக் குரல் எழுப்பிவரும் நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். #JUSTASKING என்ற ஹேஷ்டேக் கீழ் அவர் இதனைப் பதிவு செய்திருக்கிறார்.

அந்த அறிக்கை பின்வருமாறு:

மனிதனுக்கும் நதிக்கும் இடையே ஒரு நெருக்கிய பந்தம் இருக்கிறது. அதனால்தான் காவிரி பற்றி பேசும்போது நாம் உணர்ச்சிவசப்படுகிறோம். இது கர்நாடகா, தமிழ்நாடு என இருமாநில மக்களுக்குமே பொருந்தும். இருமாநில மக்களுமே நதிநீர்ப் பங்கீடு என்றுவரும்போது உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால், உணர்ச்சிவசப்படுவதால் மட்டுமே எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு வந்துவிடாது. நாம் சில பிரச்சினைகள் குறித்து சமயோஜிதமாக முடிவு செய்ய வேண்டும்.

இந்த விவகாரத்துக்கு சம்பந்தப்பட்ட இரண்டு மாநில அரசுகளும் மத்திய அரசும் நிபுணர்களும் கூட்டாக தீர்வு காண வேண்டும். நமது விவசாயிகளின் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். அரசியல் காரணங்களாலோ அல்லது வேறு ஏதோ புலப்படாத அழுத்தங்களாலோ அவர்கள் கடமையில் இருந்து தவறினால் நாம் அழுத்தம் கொடுத்து அவர்களை கடமையாற்றச் செய்ய வேண்டும். அதைவிடுத்து நாம் உணர்ச்சிகளுக்கு பலியாகிவிடக்கூடாது.

நாம் அனைவரும் ஆழ்ந்து சிந்திப்போம். காலா என்ற திரைப்படத்தை தடை செய்வதன் மூலம் நாம் எதை அடைந்துவிடுவோம். ரஜினிகாந்த் விடுத்துள்ள ஓர் அறிக்கை நம்மை காயப்படுத்தியிருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக சில அமைப்புகள் அந்தப் படத்தையே தடை செய்ய வேண்டும் எனக் கோருகின்றன. அதைத்தான் நமது ஒட்டுமொத்த கன்னடர்களும் விரும்புகிறார்களா? அதை நாம் இப்போதே கூற முடியாது அல்லவா? படம் வெளியான பின்னர் ஒருவேளை மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க படத்தைத் தவிர்த்தார்கள் என்றால் அதன்பின்னர் மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை நம்மால் துல்லியமாகக் கணிக்க முடியும். ஆனால், மக்களுக்குப் பதிலாக சில முடிவுகளை எடுக்கும் இதுபோன்ற அமைப்புகள் உண்மை என்னவென்பது உணரவிடாது.

கன்னடர்கள் பலரும் காலாவை விரும்பவில்லை என்று முடிவு செய்ய இவர்கள் யார்? தயாரிப்பாளர்களின் மூலதனம் என்னவாகும்? தயாரிப்பாளருக்கும் அறிக்கையை விடுத்த ரஜினிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? அந்தப் படத்துக்காக பணியாற்றிய திறமைசாலிகாள் நூறாயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்வார்கள்?

காலா பட போஸ்டரை ஒட்டி பிழைப்பு நடத்தும் தொழிலாளர்கள்கூட இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்வார்கள்? தியேட்டரில் கேன்டீன்கள் நடத்துபவர்கள் என்ன செய்வார்கள்? லட்சோபலட்ச சினிமா ரசிகர்களால்தான் இத்துறை வாழ்கிறது. அவர்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?

ஒரு திரைப்படத்தை தடுப்பதற்காக போராட்டம் நடத்தினால் சாமான்ய மனிதன் எவ்வளவு பாதிப்பு அடைவான். வாகனங்கள், பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்படலாம். பள்ளிகள் மூடப்படலாம். இன்னும் பட்டியல் நீண்டு கொண்டே செல்லலாம். இவற்றால், தமிழக - கர்நாடக மக்கள் இடையேயான வெறுப்புணர்வுதான் அதிகரிக்குமே தவிர வேறு பலன் என்ன இருக்கிறது?

இப்படி நமது உணர்வுகளை வைத்து வன்முறை செய்யும் இந்த கும்பல்கள் காலாவை தடுத்தபின் எங்கே செல்லும்?  இதுபோல் இன்னொரு வாய்ப்பு வரும்வரை அமைதியாக இருக்கும். இறுதியில் நாம்தான் பாதிக்கப்படுவோம். நமக்குத்தான் காயமும் பாதிப்பும் ஏற்படும். அந்த வடுக்களுடன்தான் நாம் வாழ வேண்டியிருக்கும்.

இந்தப் பதிவு பல விமர்சனங்களுக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. இதனால், என்னை சிலர் கன்னட எதிர்ப்பாளர் என்றுகூட அழைக்கலாம். இதற்கு முன் என்னை இந்து விரோதி, தேச விரோதி என்றெல்லாம்கூட மக்கள் அழைத்திருக்கின்றனர். ஆனால், அவை எல்லாம் நான் நினைத்ததைத் தெரிவிப்பதில் எனக்குத் தடையாக இருந்ததில்லை. நான் சொல்லவேண்டியதை சொல்லியே தீருவேன். மற்றவை உங்கள் மனசாட்சிப்படி நடக்கட்டும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close