[X] Close
 

விவசாயிகள் போராட்டம்: தெரிந்து கொள்ள 10 தகவல்கள்


10-things-to-know-about-gaon-bandh

  • பாரதி
  • Posted: 02 Jun, 2018 16:01 pm
  • அ+ அ-

விளைப்பொருட்களுக்கு உரிய விலை வழங்குதல், கடன் தள்ளுபடி செய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்தியபிரதேசம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் 10 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று (ஜூன் 1) தொடங்கினர்.

மத்தியபிரதேசத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த விவசாயிகளின் போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 6 விவசாயிகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி, மத்தியபிரதேசத்தில் விவசாயிகள் 10 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அண்மையில் அறிவித்திருந்தனர்.

1. நாடு முழுவதும் 172 விவசாய சங்கங்கள் இணைந்து 10 நாட்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளன. ஜூன் 1 முதல் ஜூன் 10 வரை இப்போராட்டம் நடைபெறுகிறது. இந்த பந்த்துக்கு 'காவோன்' பந்த் எனப் பெயரிடப்பட்டுள்ளாது.

2. ராஷ்ட்ரிய கிஷான் மகாசங்க் மற்றும் கிசான் ஏக்தா மஞ்ச் ஆகியன இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்துகின்றன. சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி போராட்டத்தை விவசாயிகள் விரிவுபடுத்திவருகின்றனர், இப்போராட்டத்தில் நாடு முழுவதும் இருந்து 10,000 விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.

3. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியாணா, பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மாநில விவசாயிகள் முதல்நாள் பந்த்தில் கலந்து கொண்டனர்.

4. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை நகரங்களுக்குச் சென்று விற்பதில்லை என முடிவு செய்துள்ளனர். அதேவேளையில் நகரங்களில் இருந்து அருகிலிருக்கும் கிராமச் சந்தைகளுக்குச் சென்று மக்கள் பொருட்களை வாங்கிச் செல்லலாம்.

5. இந்தப் போராட்டத்தின் முக்கிய நோக்கமே நகர்ப்புறவாசிகள் விவசாயிகளின் பிரச்சினை என்னவென்பதைப் புரியச் செய்ய வேண்டும் என்பதே. இந்தப் போராட்டம் மூலம் விவசாயிகளின் முக்கியத்துவம் என்னவென்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளும் என போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நம்புகின்றனர்.

6. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் முக்கியக் கோரிக்கை, கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரித்தல், விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் வருவதற்கான உத்தரவாதம் அளித்தல்.

7. கடந்த ஆண்டும் இதேபோல் ஒரு போராட்டம் நடந்தது. விவசாயிகள் பால் டாங்கர்களை தெருவில் கவிழ்த்தும் விளை பொருட்களை சாலைகளில் வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இந்த வருடம் விவசாயிகள் அண்டையில் உள்ள கிராமங்களில் தங்கள் விளை பொருட்களைக் கொடுத்துவிட்டு அங்கி விளைந்த பொருட்களை பண்ட மாற்று முறையில் வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

8. இந்தப் போராட்டம் கடந்த ஆண்டு ஜூன் 6-ம் தேதி மண்டாசூரில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் நடந்த ஓராண்டு நிறைவுநாளிலும் நடைபெறுகிறது.

9. முதல்நாள் போராட்டத்தின்போது பெரிய பாதிப்பு ஏற்படாத நிலையில். இன்று பஞ்சாப், ஹரியாணா, மத்தியப் பிரதேச மாநிலங்களில் காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. லூதியானா, பதீர்கோட் பகுதிகளில் விவசாயிகள் தங்கள் விலைபொருட்களை சாலையில் கிடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.

10. ஜூன் 10 அன்று தேசிய அளவில் பாரத் பந்த் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close