[X] Close
 

பாலிவுட், கோலிவுட் எல்லாம் வேணாம்.. இந்தி, தமிழ்த் திரையுலகு என்றே சொல்லுங்கள்..


bjp-general-secretary-wants-bollywood-renamed

  • பாரதி
  • Posted: 02 Jun, 2018 11:39 am
  • அ+ அ-

இந்தியத் திரையுலகில் ஒவ்வொரு மொழித் திரைப்படங்களுக்கும் ஒவ்வொர் அடைமொழி இருக்கிறது. இந்தித் திரைப்படங்கள் பாலிவுட் படங்கள் என அழைக்கப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்கள் கோலிவுட் எனவும், தெலுங்கு டோலிவுட் எனவும் மலையாளம் மோலிவுட் எனவும் அழைக்கப்படுகின்றன.

ஆனால், இப்படி எல்லாம் அடைமொழி வைக்காமல், அந்தந்த மொழித் திரைப்படங்களுக்கு அந்தந்த் மொழிப் பெயர்களையே அடைமொழியாக வைக்கலாம் என பாஜக பொதுச் செயலாளர்களுள் ஒருவரான கைலாஷ் விஜய்வர்கியா முன்வைத்துள்ளார். 

கைலாஷ் அவரது கலகலப்பான விவேகமான பேச்சுக்கு பிரபலமானவர். அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு சினிமா ஆர்வலர். இசை ஆர்வலரும்கூட. இந்தூரில் அண்மையில் நடந்த வசந்த விழாவில் எல்விஸ் பிரஸ்லியைப் போல் உடை அணிந்துவந்து அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில், தற்போது அவர் முன்வைத்துள்ள கோரிக்கை அவரை மீண்டும் ஊடக செய்திகளில் அடிபட வைத்திருக்கிறது.

நான் சமீபத்தில் பிரபல இயக்குநர் சுபாஷ் கைய்யை சந்தித்தேன். அவர் என்னிடம் பேசும்போது "பாலிவுட் என்று இப்போது நாம் பயன்படுத்தும் பதம் இந்தித் திரைப்படங்களை குறைத்து மதிப்பிடும்விதமாக அமைந்திருக்கிறது. ஹாலிவுட் என்ற அமெரிக்க சினிமாவின் அடைமொழியை மிக மலினமான முறையில் தழுவியிருப்பதுபோல் உள்ளது. நம் சினிமாவில்தான் தாதாசாகேப் பால்கேவும், சத்யஜித் ரேயும் இருந்தனர். ஆனால், இதையெல்லாம் மதிக்கலாம், நம் சுயமரியாதையைப் பொசுக்கும்விதமாக பாலிவுட் என்று பெயர் வைத்திருக்கிறோம் என்று கூறினார்" என விஜய்வர்கியா கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு விஜய்வர்கியா மத்திய இணை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோருகு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், பாலிவுட், கோலிவுட், மோலிவுட் போன்ற வார்த்தைப் பிரயோகங்களைத் தடுத்து அந்தந்த மொழியைக் குறிப்பிட்டே அந்தந்த மொழிப்படங்களை அழைக்க வேண்டும்.

1998-ல் அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் சினிமாத் துறைக்கு தொழில்துறை அந்தஸ்தை அளித்தார். இதன்மூலம் சட்டவிரோத நிதியுதவிக் குழுமங்களிடம் சிக்கியிருந்த துறை மீண்டது. சினிமாத்துறையில் மாஃபியாக்களின் ஆதிக்கம் குறைந்தது. இப்போதெல்லாம் சினிமா தயாரிக்க வங்கிகளே கூட கடன் தருகின்றன. அதேபோல் இப்போதுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியும், திரைத்துறைக்கு உள்ள பெயர்களை மாற்றி சுயமரியாதையையும் பெருமிதத்தையும் நிலைநாட்ட வேண்டும்"  எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

- நிஸ்துலா ஹெப்பார்.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close