முதல் ரயில்வே பெண் கூலித் தொழிலாளி...மஞ்சு!

மஞ்சுதேவி
ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில், முதல் பெண் கூலித் தொழிலாளியாக மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் வேலை பார்த்து வருகிறார் மஞ்சு தேவி.
இந்திய ரயில்வே துறையைப் பொருத்தவரை கூலித் தொழிலாளர்களாக ஆண்கள்தான் பணியமர்த்தப்படுவது வழக்கம். உடல் வலிமை, அதிக சுமை தூக்குதல் ஆகிய காரணங்களால் இந்தத் தொழில் ஆண்களுக்குரியதாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வடமேற்கு ரயில்வே துறை சார்பில் கூலித் தொழிலாளியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் பெயர் மஞ்சு தேவி. தற்போது, ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் கூலித் தொழிலாளியாக பணிக்குச் சேர்ந்துள்ளர் மஞ்சு. இவரின் இந்த வேலையை முபு இவரின் கணவர் பார்த்து வந்தாராம். அதாவது கணவர் பார்த்து வந்த வேலையை, அவரின் மறைவுக்குப் பிறகு மஞ்சுவுக்கு வழங்கியிருக்கிறார்கள் ரயில்வே நிர்வாகத்தினர்.
இதுகுறித்து மஞ்சு ஏஎன் ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, எனது கணவர் இறந்த பிறகு மூன்று குழந்தைகளுடன் மிகவும் துன்பப்பட்டு வந்தேன். எந்த உதவியும் இல்லாத நிலையில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. பிறகு அவர் பார்த்த வேலையே எனக்குக் கிடைத்தது. ஆரம்பத்தில் கடினமாகத்தான் இருந்தது. எனக்கு ஆங்கிலம் , ஹிந்தி எதுவும் தெரியாது. ஆரம்பத்தில் லக்கேஜ்கள் கனமாக, தூக்கமுடியாதபடி இருந்தன. ஆனால் இப்போது நன்றாகவே பழகிவிட்டேன். பிற கூலித் தொழிலாளர்கள் எனக்கு ரொம்பவே உதவியாக உள்ளனர் என்றார்.
ரயில்வே துறையில், பெண் ஒருவர் கூலித்தொழிலாளியாக இருந்து கடும் உழைப்பைக் கொடுத்து வருவதற்கு, சமூக வலைதளங்களில் இருந்து ஏராளமான பாராட்டுகள் குவிகின்றன.