[X] Close

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடு அடுத்தடுத்து சந்திப்பு; பாஜக அல்லாத அரசு அமைக்க தீவிர முயற்சி


  • kamadenu
  • Posted: 18 May, 2019 11:24 am
  • அ+ அ-

மத்தியில் பாஜக அல்லாத அரசை அமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் இன்று ராகுல் காந்தி உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களையும் அடுத்தடுத்து சந்தித்து பேசினார்.

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி, இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. நாளை 7-ம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து தேர்தல் முடிவுகள் வர இருக்கின்றன. 7-ம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.

வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அடுத்தகட்டமாக புதிய அரசு அமைப்பது தொடர்பாகவும், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி தொடர்பாகவும் இப்போதே ஆலோசனைகளை தொடங்கியுள்ளன.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு போட்டியாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் களமிறங்கியுள்ளார். மாநில கட்சிகளின் கூட்டத்தை டெல்லியில் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவர் சந்தித்து பேசினார். இதனிடையே காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் மே 23-ம் தேதி நடைபெறும் பெறும் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

தொடர்ந்து பல்வேறு மாநில கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேசி வருகிறார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அவர் சந்தித்து பேசினார். இந்தநிலையில் டெல்லி வந்த சந்திரபாபு நாயுடு இன்று அடுத்தடுத்து தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்து பேசினார்.

அப்போது பாஜக அல்லாத அரசு அமைப்பது தொடர்பாக, அனைத்து கட்சிகளையும் கொண்ட கூட்டணியை அமைப்பது தொடர்பாக அவரகள் ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து இன்று மாலை சந்திரபாபு நாயுடு, லக்னோ சென்று அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close