[X] Close

சாப்பிட்டு 20 நாட்கள் ஆகிறது... சவுதியில் கதறிய இளைஞரை மீட்க முன்னாள் அமைச்சர் நடவடிக்கை


20

  • kamadenu
  • Posted: 18 May, 2019 08:14 am
  • அ+ அ-

-என்.மகேஷ்குமார்

சவுதி அரேபியாவில் சித்திரவதைக்கு ஆளாகி வருவதாக தெலங்கானா இளைஞர் ஒருவர்கதறும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானதை தொடர்ந்து அந்த இளைஞரை மீட்க அம்மாநில முன்னாள் அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தெலங்கானா மாநிலம், சிரிசில்லா மாவட்டம், எல்லந்தகுண்டா பகுதியை சேர்ந்தவர் முகமது சமீர் (21). இவர் ஏஜென்ட் ஒருவரை நம்பி சவுதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்றார். ஆனால் அங்கு சமீருக்கு ஏஜென்ட் கூறிய வேலை தராமல், ஆடு மேய்க்கும் வேலை தரப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் கொடுத்த வேலையை சமீர் ஏற்றுக்கொண்டு, தினமும் சுமார் 300 ஆடுகளை மேய்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் சமீர், சவுதியில் தான் சித்திரவதை அனுபவிப்பதாக செல்போனில் வீடியோ எடுத்து உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார். தினமும் பிரம்படி வாங்குவதாகவும் கடும் வெயிலில் உணவுகூட தரப்படாமல் துன்புறுத்தப் படுவதாகவும் அவர் கண்ணீருடன் வீடியோவில் கூறியிருந்தார். கடந்த 20 நாட்களாக உணவின்றி தவித்து வரும் தன்னை எப்படியாவது இங்கிருந்து காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோ, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.டி. ராமாராவின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து அவர் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளிடம் பேசினார். சவுதி தூதரகத்திலும் இதுகுறித்து பேசப்பட்டது.

இதையடுத்து சமீர் விரைவில் அங்கிருந்து விடுவிக்கப்படுவார் என சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சமீர் விரைவில் தாயகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சவுதிக்கு வேலைக்குச் சென்ற கரீம் நகரை சேர்ந்த வீரய்யா என்பவரும் தான் சித்திரவதை அனுபவிப்பதாகவும் தன்னை மீட்க வேண்டும் எனவும் கடந்த வாரம் தனது செல்போனில் கோரிக்கை விடுத்திருந்தார். அவர் தற்போது மீட்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close