[X] Close

5 ஆண்டுகளில் முதல்முறையாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி: ‘கட்சிகட்டுப்பாடுகளை மீறாமல்’ கேள்விகளை அமித் ஷா பக்கம் திருப்பினார்


5

  • kamadenu
  • Posted: 17 May, 2019 19:28 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

5 ஆண்டுகளில் முதல் முறையாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி எந்தவிதமான கேள்விகளுக்கும் பதில் அளிக்க மறுத்து பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா பக்கம் திருப்பிவிட்டார்.

அதேசமயம், மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையும் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டில் பதவி ஏற்கும் போது பத்திரிகையாளர்கள அடிக்கடி சந்திப்பேன் என்று தெரிவித்திருந்தார். ஆனால், ஒருமுறை கூட பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்க வில்லை.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுடன் இணைந்து, பிரதமர் மோடி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்திக்க இருப்பதால், ஏராளமான கேள்விகளை நிருபர்கள் கேட்க தயாராக இருந்தனர்.

ஆனால், பிரதமர் மோடி சில வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு, அனைத்து கேள்விகளையும் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு திருப்பிவிட்டதால், மீண்டும் பத்திரிகையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்

பிரதமர் மோடி பேசுகையில், " மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து உங்களைச் சந்திக்க நேராக இங்கு வந்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும்.இந்த தேசத்தில் நீண்ட காலத்துக்குப்பின் இதுபோன்ற சம்பவம் நடக்கப்போகிறது.

எங்கள் தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துள்ளோம், நாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்லும் வாக்குறுதிகள். புதிய அரசு பதவி ஏற்றவுடன் அடுத்தடுத்த முடிவுகளை நாங்கள் எடுப்போம். இந்தியா தனது பன்முகத்தன்மையாலும், ஜனநாயகத்தாலும் உலகையே வியக்கவைத்துள்ளது " எனத் தெரிவித்தார்.

அப்போது நிருபர்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர். அதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, " நான் உங்களுடைய கேள்விகள் எதற்கும் பதில் அளிக்க முடியாது.ஏனென்றால், இது பாஜக தலைவர் அமித் ஷா நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு.

பாஜக முறைப்படி, ஒழுக்கத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். கட்சியின் ஒழுக்கமான தொண்டர்கள் நாங்கள். ஆதலால் எங்களுக்கு எல்லாமே கட்சியின் தலைவர்தான். ஆதலால், கேள்விகளை அவரிடமே கேளுங்கள்" என்று தெரிவித்தார்.

அதன்பின் அமித் ஷா கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் விரிவான அறிக்கையையும், செய்த சாதனைகள், திட்டங்களையும் எடுத்துரைத்தார். அப்போது அவர் கூறுகையில், " பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக்க கூட்டணி 300 இடங்களைக் கைப்பற்றும். மோடியை மக்கள ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். நரேந்திர மோடி தலைமையில் பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று நான் உறுதிகூறுகிறேன். மீண்டும் மோடியின் ஆட்சியை கொண்டுவர மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

திறமை, சிறந்த நிர்வாகம் ஆகியவற்றால் காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு மீண்டும் 2-வது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது. எங்கள் திட்டங்களை, நோக்கங்களை ஏற்கும் எந்த புதிய கட்சியும் எங்களுடைய கூட்டணிக்குள் வரலாம். அதை வரவேற்கிறோம்.

அதேசமயம் எதிர்க்கட்சிகள் தரப்பில் இரு கட்சிகள் அமர்ந்து ஏ.சி. அறையில் பேசி அமைக்கும் கூட்டணியை எல்லாம் மக்கள் ஏற்பார்கள் எனக் கூற இயலாது.

ரஃபேல் விவகாரத்தைப் பொறுத்தவரை ராகுல் காந்தி தன்னிடம் இருக்கும் எந்தவிதமான ஆதாரங்களையும் எடுத்துக்கொண்டு உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லட்டும். ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்தவிதமான சமரசமும் செய்யவில்லை, யாருக்கும் சாதகமாக நடக்கவும் இல்லை. ஒரு பைசாககூட ஊழல் நடக்கவில்லை. " எனத் தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close