[X] Close

காந்தியை அவமதித்த பிரக்யாவுக்கு மன்னிப்பு இல்லை: பிரதமர் மோடி கடும் சாடல்


  • kamadenu
  • Posted: 17 May, 2019 15:26 pm
  • அ+ அ-

மகாத்மா காந்தியை அவமதித்த பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகுர் மன்னிப்பு கோரினாலும், அவரை நான் மன்னிக்க தயாராக இல்லை என பிரதமர் மோடி தெரிவித்தார்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் பிரக்யா சிங் தாக்குர். தற்போது ஜாமீனில் இருக்கும் அவர், போபால் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலாக, பல்வேறு கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

காத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி' என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அவரது கருத்து தொடர்பாக பிரக்யா சிங் தாக்குர் நேற்று கூறும்போது, “நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அன்றைக்கு மட்டுமின்றி இன்றைக்கும், என்றைக்குமே அவர் தேச பக்தர்தான்” என தெரிவித்தார்.

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் எனக் கூறியது பெரும் சர்ச்சையானதை அடுத்து, தமது கருத்தை போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் நேற்று திரும்பப் பெற்றார்.

இதுபோலவே, பாஜக எம்.பி நளினி குமார் கட்டீல், அனந்தகுமார் ஹெக்டே ஆகியோரும் கோட்சே குறித்த சர்ச்சையான கருத்து தெரிவித்தனர்.

இதற்கு பாஜக தலைவர் அமித் ஷா கண்டனம் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து அவர்  கூறுகையில் ‘‘கோட்சேவின் செயலை யாரும் நியாயப்படுத்த முடியாது. பாஜகவை சேர்ந்த பிரக்யா சிங் தாகுர், அனந்தகுமார் ஹெக்டே கட்டீல் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களில் கட்சிக்கு உடன்பாடு இல்லை. கட்சியின் கொள்கைக்கு முற்றிலும் மாறானது. இதனை ஏற்க முடியாது.

அவர்கள் தங்கள் பேச்சுக்கு ஏற்கெனவே மன்னிப்பு கோரியுள்ளனர். இருப்பினும் இதுகுறித்து அவர்களிடம் விளக்கம் கோரப்படும். அவர்களிடம் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும். 10 நாட்களுக்குள் விசாரித்து அறிக்கை அளிக்க ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு பரிந்துரைத்துள்ளேன்’’ எனக் கூறினார்.

இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில் ‘‘மகாத்மா காந்தியை பிரக்யா சிங் தாகுர் அவமதித்து விட்டார். பண்பட்ட சமூகத்தில் இதுபோன்ற பேச்சுக்கு இடமில்லை.  இதற்காக அவர் மன்னிப்பு கோரியுள்ளார். ஆனாலும் அவரை மன்னிக்க நான் தயாராக இல்லை’’ எனக் கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close