[X] Close

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேருக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு


7

  • kamadenu
  • Posted: 17 May, 2019 14:11 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான போபால் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்ட 7 பேரும் வாரம் ஒருமுறை நேரில் ஆஜராக வேண்டும் என்று  சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்கு முறையாக ஆஜராக தவறியதால், தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்ற நீதிபதி வினோத் பதல்கர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் மாலேகான் நகரில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி ஒரு மசூதி அருகே இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்டனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக புரோகித், பிரக்யா சிங் தாக்குர், ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாயா, அஜய் ரஹிர்கார், சுதாகர் திவேதி, சுதாகர் சதுர்வேதி, சமீர் குல்கர்னி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஐபிசி 120(பி), 302, 207, 324, 153(ஏ) ஆகிய பிரிவுகளிலும், சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவிடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.,) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கீழ் நீதிமன்றங்களில் பிரக்யா சிங், புரோகித் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மும்பை உயர் நீதிமன்றம் 9 ஆண்டுகளுக்குப்பின் ஜாமீன் வழங்கியது.

ஜாமீன் கிடைத்தபின் பாஜகவில் பிரக்யா சிங் தாக்குர் இணைந்தார். அதன்பின் பாஜக சார்பில் போபால் மக்களவைத் தொகுதியில் பிரக்யா சிங் போட்டியிடுகிறார்.

ஆனால், ஜாமீனில் வந்தபின் நீதிமன்ற விசாரணைக்கு முறையாக பிரக்யா சிங் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜராகவில்லை. இதனால், சிறப்பு நீதிமன்ற நீதிபதி வினோத் பதல்கர் இன்று அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்தார்.

அதன்படி, மலேகான் குண்டுவெடிப்பில் குற்றச்சாட்டுக்கு ஆளாகிய பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரும் வாரம் ஒருமுறை நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணங்களைக் கூறித்தான் விசாரணையில் இருந்து விலக்குப் பெற முடியும்" என உத்தரவிட்டார்.

தற்போது சிறப்பு நீதிமன்றம் சாட்சிகளின் வாக்குமூலங்களை பெற்று வருகிறது. வழக்கின் விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு நீதிபதி  ஒத்திவைத்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close