[X] Close

மீண்டும் பாஜக வரக்கூடாது; பிரதமராக மாநிலக் கட்சித் தலைவரை ஆதரிக்க தயாராகிய காங்கிரஸ்


  • kamadenu
  • Posted: 17 May, 2019 12:04 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் காங்கிரஸ் கட்சி, பிரதமராக மாநிலக்கட்சித் தலைவரை ஆதரிக்கவும் முன்வந்துவிட்டது.

மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், பிரதமர் பதவி தங்களுக்கு முக்கியமில்லை என்றும் காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைவதை தடுக்க காங்கிரஸ் தீவிரமாக காய்களை நகர்த்த வருகிறது.

இதற்கு ஏற்றார்போல்தான் மக்களவைத் தேர்தல் முடிவு வரும் 23-ம் தேதி பாஜக கூட்டணியில் அல்லாத அனைத்துக் கட்சிகளையும் அழைத்து ஆலோசனை நடத்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உ.பி.யில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் , ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

அதேசமயம், மூன்றாவது அணி அமைக்க முயற்சி செய்துவரும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரையும் கூட்டத்துக்கு அழைக்க காங்கிரஸ் சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இது குறித்து காங்கிரஸ் கட்சி உறுதியாக கூற மறுக்கிறது. மேலும், மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நோக்கம் மத்தியில் மீண்டும் பாஜக அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவே அனைத்துக் கட்சிகளையும் அழைத்து பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளது.

தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாகக் உருவெடுத்தால்கூட, பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்கும் பொருட்டு, பிரதமர் பதவியை மாநிலக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்கவும் தயாராகிவிட்டது.

ஒருவேளை பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில் அனைத்து கட்சிகளையும் ஒன்றுதிரட்டி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரும்.

இந்த நோக்கத்தைத்தான் காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவருமான குலாம் நபி ஆசாத் விளக்கியுள்ளார்.

சிம்லாவில்  அவர் நிருபர்களிடம் கூறுகையில், " என்னுடைய கட்சித் தலைமை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டது. தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் கட்சி வந்தால்கூட,  மாநில கட்சிகளில் இருந்து ஒரு தலைவர் பிரதமராக வர விரும்பினால்கூட அதை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும். காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி வழங்கப்படாவிட்டால்கூட அதை ஒரு பிரச்சினையாகமாற்ற மாட்டோம் " எனத் தெரிவித்துள்ளார்.

surjewala.jpg 

ஆனால், அதேசமயம், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, இந்த கருத்தில் சற்றே மாறுபடுகிறார். அவர் கூறுகையில், " தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வரும் என்று நம்புகிறோம். மிகப்பெரிய கட்சி ஆட்சி அமைக்கக் கோருவது, வழிநடத்துவது இயல்பு, வழக்கமானது.

காங்கிரஸ் கட்சிதான் மிகப்பெரிய கட்சியாக இருப்போம் என்று தொண்டர்கள் நம்புகிறார்கள். எங்கள் மனநிலையோடு ஒத்த கட்சிகளுடன், இணைந்து, ஜனநாயக, சுதந்திர, மதச்சார்பற்ற அரசை நாங்கள் அமைப்போம் " எனத் தெரிவித்தார்.

ஒருவேளை எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் குடியரசு தலைவர் யாரை ஆட்சி அமைக்க அழைப்பார் என்ற கேள்விக்கு சுர்ஜேவாலா கூறுகையில், " உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவாக வழிகாட்டியுள்ளது.தேர்தலுக்கு முன் மிகப்பெரிய கூட்டணியாக யார் இருக்கிறார்களோ அவர்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதை பின்பற்றுவார்கள் என்று நம்புகிறோம் " எனத் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close