[X] Close

கோட்சே குறித்த பிரக்யா சிங் பேச்சு: பிரதமர் மன்னிப்பு கோர காங்கிரஸ் வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 17 May, 2019 10:07 am
  • அ+ அ-

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என பிரக்யா சிங் தாக்குர் கூறியதற்காக பிரதமர் மோடியும், அமித் ஷாவும் மன்னிப்பு கோர வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் வலியுறுத்தியுள்ளார்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் பிரக்யா சிங் தாக்குர். தற்போது ஜாமீனில் இருக்கும் அவர், போபால் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலாக, பல்வேறு கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

காத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி' என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அவரது கருத்து தொடர்பாக பிரக்யா சிங் தாக்குர் நேற்று கூறும்போது, “நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அன்றைக்கு மட்டுமின்றி இன்றைக்கும், என்றைக்குமே அவர் தேச பக்தர்தான். அவரை தீவிரவாதி எனக் கூறுபவர்கள், முதலில் அவர் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். கோட்சே குறித்து அவதூறாக பேசுபவர்களுக்கு இந்தத் தேர்தலில் தக்க பதிலடி கிடைக்கும்” என தெரிவித்தார்.

பிரக்யா தாக்குரின் இந்தக் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் கூறும்போது, “பிரக்யா தாக்குரின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவிக்கிறது. அவரது கருத்துடன் பாஜக உடன்படவில்லை. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றவர் எப்படி தேசபக்தராக இருக்க முடியும்? இதுதொடர்பாக பிரக்யாவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தமது கருத்துக்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என கூறியுள்ளார்.

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் எனக் கூறியது பெரும் சர்ச்சையானதை அடுத்து, தமது கருத்தை போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் நேற்று திரும்பப் பெற்றார். எனினும் இதற்காக பிரதமர் மோடியும், அமித் ஷாவும் மன்னிப்பு கோர வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து போபால் தொகுதியில் பிரக்யா சிங்கை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறியதாவது:

நாதுராம் கோட்சே சிறந்த தேச பக்தர் என பிரக்யா புகழ்ந்து கூறியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கோட்சேவை போற்றுவது தேசபக்தி அல்ல. தேச துரோகம். பிரக்யாவின் இந்த சர்ச்சை கருத்துக்கு பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close