[X] Close

மீண்டும் போபர்ஸ் வழக்கை கையில் எடுக்கிறது சிபிஐ:தொடர்ந்து விசாரிக்க முடிவு


  • kamadenu
  • Posted: 17 May, 2019 09:54 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

ஸ்வீடன் நாட்டில் இருந்து வாங்கப்பட்ட போபர்ஸ் பீரங்கியில் ரூ.64 கோடி ஊழல் நடந்ததாகக் கூறப்பட்ட வழக்கில் மீண்டும் விசாரணையை தொடரப்போவதாக சிபிஐ அறிவித்துள்ளது.

கடந்த 1986-ம் ஆண்டு ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, ஸ்வீடன் நிறுவனமான போபர்ஸிடம் இருந்து ரூ.1,473 கோடி மதிப்பில் 400 பீரங்கிகள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக ரூ.64 கோடி லஞ்சமாக வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

நாடுமுழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய இந்த ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பெயரும் அடிபட்டது.

இந்த ஊழல் தொடர்பாக போபர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மார்டின் அர்ட்போ, இடைத்தரகர் குவாத்ரோச்சி, சத்தா, ராஜீவ் காந்தி, பாதுகாப்பு செயலாளர் பட்நாகர், தொழிலதிபர்களான இந்துஜா சகோதரர்கள் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகையை பதிவு செய்தது. இதில் பட்நாகர், சத்தா, ராஜீவ் காந்தி மரணடைந்துவிட்டனர்.

இதையடுத்து, இந்த வழக்கை விசாரணை செய்த டெல்லி உயர் நீதிமன்றம், கடந்த 2005ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் இந்துஜா சகோதரர்களை விடுவித்தது.

இதையடுத்து சிபிஐ தரப்பில் முறையீடு ஏதும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த அஜய்குமார் அகர்வால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் 2005ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி ஒருமனுத் தாக்கல் செய்தார். அதில் போபர்ஸ் ஊழல் வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தார். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இதற்கிடையே 12 ஆண்டுகளாக சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்படாத நிலையில், சமீபத்தில் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையிடம் மேல்முறையீடு செய்யக்கோரி அனுமதி கோரியது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் சிபிஐ தாக்கல் செய்த மனுவில் போபர்ஸ் வழக்கை விசாரிக்க அனுமதி அளிக்கும்படி கோரப்பட்டு இருந்தது. ஆனால், அந்த மனுவையும் சிபிஐ தரப்பில் வாபஸ் பெறப்பட்டு, புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் விசாரணையை தொடரப்போவதாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிஐ செய்தித்தொடர்பாளர் நிதின் வகான்கர் கூறியதாவது:

மைக்கேல் ஹெர்ஷ்மேன் குறித்து புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், போபர்ஸ் வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த நீதிமன்றத்தில் அனுமதி கோரினோம். இநத் வழக்கில் விசாரணை தேவை எனக் கருதினால், சிபிஐ விசாரணையைத் தொடரலாம் அதற்கு அதிகாரம் இருக்கிறது. நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை என்று கடந்த 8-ம் தேதி நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து நாங்கள் பெற்ற சட்ட ஆலோசனையின் அடிப்படையில், ஐபிசி 173(8)-இன் கீழ் போஃபர்ஸ் வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றத்தின் அனுமதி தேவை இல்லை தகவலை நீதிமன்றத்திடம் தெரிவித்தால் போதும் என்பதால்  நீதிமன்றத்தில்  கடந்த 16-ஆம் தேதி மனு தாக்கல் செய்தோம். போஃபர்ஸ் ஊழல் குறித்த எங்களது விசாரணை தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு வகான்கர் தெரிவித்தார்.

இதற்கிடையே அமெரிக்காவில் உள்ள புலனாய்வு நிறுவனத்திடம் போபர்ஸ் பீரங்கி குறித்து சில தகவல்களை  ஹெர்ஸ்மேன்,வெளியிட்டது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்தாதல், சிபிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close