[X] Close

‘கோட்சே தேசபக்தர்’ கருத்தை வாபஸ் பெற்றார் பிரக்யா


  • kamadenu
  • Posted: 17 May, 2019 08:41 am
  • அ+ அ-

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் எனக் கூறியது பெரும் சர்ச்சையானதை அடுத்து, தமது கருத்தை போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் நேற்று திரும்பப் பெற்றார்.

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி' என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அவரது கருத்து தொடர்பாக பிரக்யா சிங் தாக்குர் நேற்று கூறும்போது, “நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அன்றைக்கு மட்டுமின்றி இன்றைக்கும், என்றைக்குமே அவர் தேச பக்தர்தான். அவரை தீவிரவாதி எனக் கூறுபவர்கள், முதலில் அவர் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். கோட்சே குறித்து அவதூறாக பேசுபவர்களுக்கு இந்தத் தேர்தலில் தக்க பதிலடி கிடைக்கும்” என தெரிவித்தார்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் பிரக்யா சிங் தாக்குர். தற்போது ஜாமீனில் இருக்கும் அவர், போபால் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலாக, பல்வேறு கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதனிடையே, பிரக்யா தாக்குரின் இந்தக் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் கூறும்போது, “பிரக்யா தாக்குரின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவிக்கிறது. அவரது கருத்துடன் பாஜக உடன்படவில்லை. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றவர் எப்படி தேசபக்தராக இருக்க முடியும்? இதுதொடர்பாக பிரக்யாவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தமது கருத்துக்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என கூறியுள்ளார்.

பிரக்யா தாக்குரின் கருத்துக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:பாஜகவினர் நாதுராம் கோட்சேவின் வழித்தோன்றல்கள் என்பது தற்போது தெளிவாகியிருக்கிறது. கோட்சேவை தேச பக்தர் எனக் கூறி தேசப் பிதா மகாத்மா காந்தியையும், அவரது கொள்கைகளையும் பிரக்யா தாக்குர் அவமதித்துவிட்டார். இதற்காக, பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். வன்முறை கலாச்சாரத்தைவிதைப்பது, தியாகிகளை அவமதிப்பதும் பாஜகவின் மரபணுவில் கலந்திருக்கிறது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது என அவர் தெரிவித்தார்.

கருத்து வாபஸ்

இந்தச் சூழலில், தமது கருத்து பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து, அதனை பிரக்யா சிங் தாக்குர் நேற்று மாலை திரும்பப் பெற்றார். மேலும், தனது கருத்துக்கு அவர் மன்னிப்பும் கோரியதாக பாஜக மூத்த தலைவர் ஹிதேஷ் பாஜ்பாய் செய்தியாளர்களிடம் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close