[X] Close

ரூ.5 லட்சம் வாங்கி வரச்சொல்லி ‘வாட்ஸ் அப்’பில் முத்தலாக் கூறிய கணவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு


5

  • kamadenu
  • Posted: 17 May, 2019 08:43 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

தாய் வீட்டில் ரூ.5 லட்சம் வாங்கி வரச் சொல்லி மனைவியை கொடுமைப்படுத்தி, வாட்ஸ் அப்பில் முத்தலாக் கூறிய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முஸ்லிம்கள் தங்கள் மனைவியை விவாகரத்து செய்ய, முத்தலாக் நடைமுறையைப் பின்பற்றி வந்தனர். இதை தடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வழக்குத் தொடுத்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘முத்தலாக் நடைமுறையில் விவாகரத்து செய்வது சட்டவிரோதம்’’ என்று உத்தரவிட்டது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் முஸ்லிம் ஒருவர் தன் மனைவிக்கு வாட்ஸ் அப்பில் முத்தலாக் அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து தானேவில் உள்ள போய்வடா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கல்யான் கர்பே நேற்று கூறியதாவது:

தானேவில் உள்ள கல்யான் நகரைச் சேர்ந்த 25 வயதுடைய ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு, கடந்த 2014-ம் ஆண்டு மே 18-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. அவருக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில், கணவரும் அவரது குடும்பத்தாரும் அந்தப் பெண்ணை கொடுமைப்படுத்தி உள்ளனர்.

மேலும், தாய் வீட்டில் இருந்து ரூ.5 லட்சம் வாங்கி வரச் சொல்லி அந்தப் பெண்ணை கணவர் கொடுமைப்படுத்தி இருக்கிறார். அத்துடன் வீட்டை விட்டும் அப்பெண்ணை வெளியில் துரத்தியுள்ளனர். தற்போது அவர் பிவாண்டியில் உள்ள உறவினர் வீட்டில் வசிக்கிறார். அதன்பிறகு கடந்த 12-ம் தேதி அந்தப் பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் கணவர் முத்தலாக் அனுப்பி உள்ளார்.

இதையடுத்து கடந்த வாரம் போலீஸ் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் 28 வயது கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது கடந்த புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கொடுமை, வேண்டுமென்றே காயப்படுத்துதல், உள்நோக்கத்துடன் அவமானப்படுத்துதல் மற்றும் முஸ்லிம் பெண்கள் திருமணப் பாதுகாப்பு உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு போய்வடா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கல்யான் கர்பே கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close