[X] Close

தேர்தலில் போட்டியிடும் ‘ரிவால்வர் ரீட்டாக்கள்’; அரசியல்வாதிகளின் மனைவிகளிடம் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்


  • kamadenu
  • Posted: 17 May, 2019 08:40 am
  • அ+ அ-

-ஆர்.ஷபிமுன்னா

வட மாநிலங்களின் அரசியல்வாதிகளை போல் அவர்களது மனைவிமார்களும் துப்பாக்கிக் கலாச்சாரத்தை கைவிட முடியாமல் உள்ளனர். மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அப்பெண்கள்‘ரிவால்வர் ரீட்டாக்கள்’ எனக் கிண்டலுடன் அழைக்கப்படுகிறார்கள்.

வட மாநிலங்களில் அரசு உரிமம் பெற்று துப்பாக்கிகளை வைத்து கொள்வது கவுரவச் சின்னமாகக் கருதப்படுகிறது. இதற்காக அம்மாநில அரசியல்வாதிகள் இடையே துப்பாக்கி உரிமங்கள் பெற கடும் போட்டியும் உண்டு.

ஆண்களிடம் மட்டும் இருந்த இந்த துப்பாக்கிகள் மீதான ஆர்வம், அரசியல்வாதி வீட்டுப் பெண்களிடமும் அதிகரித்து வருவது இத்தேர்தலில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்தவர்களின் மனைவிமார்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த தகவல்,தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மூலமாக தெரியவந்துள்ளது.

உ.பி.யின் முன்னாள் முதல்வரும் ராஜஸ்தானின் இந்நாள் ஆளுநருமாக இருப்பவர் கல்யாண்சிங். இவரது மகன் ராஜ்வீர்சிங், உ.பி.யின் ஏட்டாவில் பாஜகவேட்பாளர். இவரது வேட்புமனுவில், தன்னிடம் ஒரு குழல் துப்பாக்கி, கைத்துப்பாக்கி மற்றும் சுழல்துப்பாக்கி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், இந்த மூன்றும் தன் மனைவி பிரேமலதா தேவியிடமும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து சுயேச்சையாக மனுச் செய்தவர் அத்தீக் அகமது. கிரிமினல் அரசியல்வாதியான இவர், ஒரு கொலை வழக்கில் கைதாகி உ.பி.யின் நைனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தபடி வேட்புமனு தாக்கல் செய்தவரிடம் இரட்டைக்குழல் துப்பாக்கி, கைத்துப்பாக்கி மற்றும் சுழல் துப்பாக்கி இருப்பது பதிவாகி உள்ளது.

இவரது மனைவி ஷாயிஸ்தா பர்வீனிடமும் இதே மூன்று வகையான துப்பாக்கிகள் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு மே 19-ல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் திடீர் என போட்டியில் இருந்து விலகுவதாக அத்தீக் அறிவித்து விட்டார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைவருமான வி.கே.சிங் காஜியாபாத்தில் பாஜகவுக்காக மீண்டும் போட்டியிடுகிறார்.

இவருக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையின் காவலர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இருப்பினும், அவரிடமும் இரண்டு கைத்துப்பாக்கிகள் இருப்பதாக தன் வேட்புமனுவில் அவர் கூறியுள்ளார். தனது மனைவிபாரதி சிங்கிடம் ஒரு கைத்துப்பாக்கியும், குழல் துப்பாக்கியும் இருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

உ.பி.யின் முராதாபாத்தில் பாஜக வேட்பாளரான குன்வார் சர்வேஷ் சிங்கிடமும், அவரது மனைவியிடமும் மூன்று வகையான மொத்தம் ஆறு துப்பாக்கிகள் உள்ளன. இதே மாநிலத்தின் மீரட்டில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் வேட்பாளர் யாகூப் குரைஷி,அவரது மனைவி சஞ்ஜிதா குரைஷியிடமும் இரண்டு வகையான துப்பாக்கிகள் நான்கு உள்ளன.

தர்ஹரா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரும், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான ஜிதின் பிரசாத்திடமும் இரண்டு வகையான துப்பாக்கிகள் உள்ளன.

பிரசாத்தின் மனைவி நேஹா பிரசாத்திடமும் அதே வகையிலான இரண்டு துப்பாக்கிகள் உள்ளன. இப்பட்டியலில், பிஜ்னோரின் காங்கிரஸ் வேட்பாளர் நசீமுத்தீன் சித்திக்கீ, அவரது மனைவி ஹுஸ்னா சித்திக்கீயும் இடம்பெற்றுள்ளனர்.

துப்பாக்கி கலாச்சாரத்திற்கு பெயர்போன மற்றொரு மாநிலமான பிஹாரில் இதைவிட மோசமான நிலை. இம்மாநிலத்தின் கிரிமினல் அரசியல்வாதிகள் பலராலும் இந்தமுறை மக்களவை தேர்தலில் பல்வேறு காரணங்களால் போட்டியிட முடியவில்லை. இதனால், அவர்களில் சிலர் தம் மனைவிமார்களை போட்டியிட வைத்துள்ளனர். இவர்கள் அனைவரிடமும் இரண்டு முதல் மூன்று வரையிலான துப்பாக்கிகள் இருப்பது அவர்களின் வேட்புமனுக்களில் தெரியவந்துள்ளது. இதில், ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் முகம்மது சகாபுத்தீனின் மனைவியான ஹென்னா சாஹேபும் இடம் வகிக்கிறார்.

பிஹாரின் கிரிமினல் அரசியல்வாதிகளான முன்னா சுக்லா, ராஜன் திவாரி, சூரஜ்பான்சிங், பிரபுநாத்சிங், அனந்த்சிங், சதீஷ் சந்திர துபே, ராமாசிங் மற்றும் மனோரஞ்சன் சிங் ஆகியோரின் மனைவி அல்லது உறவினர்களும் பல்வேறு கட்சிகள் சார்பில் போட்டியில் உள்ளனர். இவர்கள் அனைவரிடமும் ஒன்றுக்கும் அதிகமான துப்பாக்கிகள் உள்ளதாகக் கூறியுள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close