[X] Close

உருளைக் கிழங்கும் காப்புரிமை சட்டமும்


  • kamadenu
  • Posted: 17 May, 2019 07:27 am
  • அ+ அ-

ஜே.சரவணன்

மராத்தியில் வெளியான ‘மண்டி’ என்ற குறும்படத்தில் வெங்காய விவசாயி ஒருவர் இரண்டு மூட்டை வெங்காயத்தை மண்டிக்குக் கொண்டு சென்று விற்கப் போவார். வண்டிக் கூலி, மண்டி நுழைவுக் கட்டணம், ஏற்றி இறக்குதல் கூலி, நிர்வகிப்பு கட்டணம் எனப் பல கட்டணங்களைக் குறிப்பிட்டு இறுதியாக வெங்காயத்துக்கான விலை போக, மீதத் தொகையை அந்த விவ சாயி, மண்டி வியாபாரிக்கு கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார். அவரோ உடைந்துபோய் அழத்தொடங்கி விடுவார். வெங்காயம் விற்ற பணத்தில் தனக்கு ஒரு பொம்மை கிடைக்கும் என்ற கனவுடன் விவசாயியுடன் வந்த மகன், தந்தையின் நிலையைப் பார்த்து கோபப் பட்டு வெங்காயத்தை நாலா பக்கமும் விசிறி அடிப்பதுடன் படம் நிறைவடையும்.

இந்திய விவசாயிகளைப் பொறுத்த வரை இதுதான் பெரும்பாலானோரின் நிலை. விதை செலவு, விளைவிப்பதற் கான செலவு, அறுவடை செலவு, இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் இழப்புகள், விளைச்சலை கொண்டு போய் விற்பதற் கான சரக்கு போக்குவரத்து செலவு என பல செலவினங்களைத் தாண்டி லாபம் பார்ப்பது என்பது சவாலானதாக உள்ளது. இந்த வகையில் விவசாயிகளுக்குக் கிடைக்கும் லாபம் என்பது மிக மிகச் சொற்பம். ஆனால், உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உணவுப் பதப்படுத் தல் நிறுவனங்கள் மூலமாக விவசாயி களுக்கு நேரடியாக கிடைக்கும் பலன் கள் ஏராளம். இந்தப் பின்னணியில் பெப்சி நிறுவனத்தின் உருளைக்கிழங்கு விவகாரத்தை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

குஜராத் உருளைக்கிழங்கு விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் வழக்கு தொடுத்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் அரசு உட்பட பல தரப்பினரும் விவசாயிகள் பக்கம் நின்றனர். விவசாயிகள் மீது வழக்கு தொடுத்தது மட்டுமல்லாமல், தலா ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்ட பெப்சி நிறுவனம் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இறுதியில், அரசியல் அழுத்தங்கள் காரணமாக விவசாயிகள் மீது தொடுத்த வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற்றது பெப்சி.

இப்போதைக்கு இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருந்தாலும், இந்த வழக்கு பல்வேறு கேள்விகளை எழுப்புவதால் அதுகுறித்து பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. விதை காப்புரிமை மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சட்டம் (PPV&FR) யாருக்கு என்ன உரிமையை வழங்குகிறது என்பது இங்கே கேள்விக் குறி ஆகியிருக்கிறது. காப்புரிமை தொடர் பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தால் நிறுவனங்களுக்கு இதுதான் முடிவா என்ற கேள்வியும் இந்த விவகாரத்தின் பின்னணியில் எழுப்பப்படுகிறது.

எனவேதான், விவசாயிகளிடம் பெப்சி நிறுவனம் ரூ.1 கோடி கேட்டது சரியான அணுகுமுறை அல்ல என்று பேசும் அதேசமயம், பெப்சி நிறுவனம் முன்வைக் கும் காப்புரிமை சட்டத்தையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டி யிருக்கிறது. காரணம், பல ஆண்டுகால ஆராய்ச்சி முயற்சியும், பல நூறு கோடி முதலீடும் செய்யப்பட்டு உருவாக்கப் படும் ஒரு கண்டுபிடிப்பையும், புதிய சிந்தனையையும் யார் வேண்டுமானாலும் எளிதில் காப்பியடிக்கலாம் எனில், கண்டுபிடிப்புகளுக்காகப் பெறப்படும் காப்புரிமையின் அர்த்தம்தான் என்ன என்ற கேள்வி இங்கே எழுகிறது.

பெப்சி தனது லேஸ் சிப்ஸ் பிராண்டுக் காகவே பல நூறு கோடி முதலீடு செய்து, பல ஆராய்ச்சிகள் மேற் கொண்டு பிரத்யேகமான ஒரு உருளைக் கிழங்கு வகையை உருவாக்குகிறது. அதுமட்டுமல்லாமல், அதற்கு அந்தந்த நாடுகளில் காப்புரிமை பதிவையும் பெறு கிறது. காப்புரிமை பெற்றிருந்தாலும், அதன் விருப்பத்துக்கு விதைகளை விளை வித்து லாபம் ஈட்ட அரசு அனுமதித்து விடவில்லை. அரசின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு, உருளைக்கிழங்கை எங்கோ விளைவித்து இறக்குமதி செய் யாமல், இந்திய விவசாயிகளை வைத்தே அந்த உருளைக்கிழங்கை விளைவித்து, நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் அவர்களிடமிருந்து நேரடியாக உருளைக் கிழங்குகளைப் பெற்றுக்கொள்கிறது. அந்த வகையில் பெப்சியின் உருளைக் கிழங்கு விளைச்சலில் இந்தியாவில் 24 ஆயிரம் விவசாயிகள் ஒப்பந்த முறையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கான வாழ்வாதாரம் என்பது பெப்சியின் அந்த காப்புரிமை பெற்ற உருளைக்கிழங்கு மூலம்தான் கிடைக்கிறது.

பெரும்பாலும் காப்புரிமை பெறப்பட்ட விதைகள் பல்வேறு கட்ட ஆராய்ச்சி களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட வையாக இருக்கின்றன. பெப்சியின் இந்த உருளைக்கிழங்கு மட்டுமல்ல இதைப் போல நூற்றுக்கணக்கான விதைகள் பல்வேறு நிறுவனங்களால் காப்புரிமை பெறப்பட்டுள்ளன. அதற்கு பல நூறு கோடி செலவுகளை நிறுவ னங்கள் செய்திருக்கின்றன. மேலும், அந்த விதை ரகங்களை பொது விற் பனைக்குப் பயன்படுத்தாமல் தங்களது பிரத்யேக தயாரிப்புக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றன. இதனைச் சந்தைப்படுத்துவதன் மூலம் பல ஆயி ரம் பேருக்கு வேலைவாய்ப்பும் வாழ்வா தாரமும் கிடைக்கின்றன. இதனடிப்படை யில் நிறுவனங்கள் காப்புரிமை சட்டத் தின்படி உரிமை கோருவது என்பது நிறுவனத்தின் நலனுக்கானது மட்டு மல்ல, நிறுவனத்தை நம்பியுள்ள பல ஆயிரக்கணக்கான பேருக்கும் சேர்த்துத் தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டி யிருக்கிறது.

எனவே, பல நூறு கோடி முதலீட்டில், பலரின் ஆராய்ச்சியில் உருவாகும் காப்புரிமை பெற்ற ஒரு பொருளை, வேறொருவர் எளிதில் காப்பியடித்து அதன் மூலம் லாபம் ஈட்டுவது என்பது எந்த வகையிலும் சரியல்ல. அதுபோன்ற நடவடிக்கைகளை ஆதரிப் பதன் மூலம், காப்புரிமை சட்டத்தின் மீதான நம்பகத்தன்மை கெடுவதோடு மட்டு மல்லாமல், எதிர்காலத்தில் எந்தவொரு நிறுவனமும் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடவோ, கண்டுபிடிக்கப்பட்ட பொருளைச் சந்தைப்படுத்தவோ, இந்தியா போன்ற நாடுகளில் முதலீடு செய்யவோ முயற்சிகளை மேற்கொள்ள தயக்கம் காட்டும்.

அதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டால், மனித குலத்தின் வளர்ச்சியும், பொருளாதார ரீதியிலான வளர்ச்சியும் தேக்கம் கண்டுவிடும் நிலைதான் உண்டாகும். எனவே, காப்புரிமை சட்டங்களை மதிக்க வேண்டியது அவசியம். ஏனெனில், இதன் பின்னணியிலும் பல ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக காப்புரிமை, வணிக முத்திரை சார்ந்த வழக்குகளில் அனுபவமுள்ள சுரானா அண்ட் சுரானா சட்ட நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் வினோத்திடம் பேசினோம். அவர் கூறியதாவது: “குஜராத் விவசாயிகள் மீது பெப்சி போட்ட வழக்கு இந்தியாவுக்கே புதிது. விதை காப்புரிமை மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சட்டம் (PPV&FR) 2001-படி விதையைப் பதிவு செய்தவருக்கு அதன் மீதான பிரத்யேக உரிமை 15-18 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின் பிரிவு 64 படி விதைக்குக் காப்புரிமை பெற்றவரின் அனுமதி இல்லாமல் யாரும் அந்த விதையை விற்கவோ விளைவிக்கவோ முடியாது. இதன் அடிப்படையில் பெப்சி நிறுவனம் குஜராத் விவசாயிகள் மீது வழக்கு தொடுக்கிறது. ஆனால், இதே சட்டத்தில் பிரிவு 39, விவசாயிகள் எந்த வகையான பயிரையும் விளைவிக்கலாம் விற்கலாம் என்கிறது. ஆனால், அதனை பிராண்டட் வகை எனச் சொல்லி விற்பனை செய்யக் கூடாது என்ற நிபந்தனையை விதிக் கிறது. அந்த வகையில், விவசாயிகள் மீது பெப்சி போட்ட வழக்கு என்பது அர்த்தமற்றதாகிறது. மேலும், இந்த வழக்கில் அவர்கள் பிராண்டட் உருளைக் கிழங்கு என்று சொல்லி விற்பனை செய்தார்களா இல்லையா என்பதற்கான குறிப்பே இல்லை. அதுமட்டுமல்லாமல் உருளைக்கிழங்கு விளைவிக்க விதை தேவையில்லை. ஏனெனில் அது ட்யூபர் வகை பயிரிடலை சார்ந்தது. எனவே உருளைக்கிழங்குகளை யார் வேண்டுமானாலும் எளிதில் பயிரிட முடியும். மேலும் விவசாயிகளுக்கு காப்புரிமை சட்டம் குறித்த விழிப் புணர்வும் பெரிதாக இல்லை. அவர் களைப் பொறுத்தவரை நல்ல விலைக்குப் போகும் உருளைக்கிழங்கு விளைவித்து நாலு காசு பார்க்க முடியுமா என்பதோடுதான் அவர்கள் யோசிப்பார்கள். இதுபோன்ற சிக்கல்கள் இருப்பதால்தான் இந்த விதை காப்புரிமை மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சட்டம் (PPV&FR) வேளாண் துறையின் வளர்ச்சிக்குச் சாதகமானதா இல்லை, எதிரானதா என்ற குழப்பமே ஏற்படுகிறது” என்றார்.

கார்ப்பரேட் விவசாயம் ஏன் தவிர்க்க முடியாததாகிறது? இந்தியாவில் உணவுப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் பதப்படுத்துதல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெரு நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான வேளாண் பொருட்களை சந்தை வியாபாரிகளிடமிருந்து வாங்கு வதில்லை. நேரடியாக விவசாயிகளிட மிருந்தோ அல்லது ஒப்பந்த அடிப் படையில் விவசாயிகளை வைத்து விளைவித்தோ பெற்றுக்கொள்கின்றன.

இந்த நிறுவனங்கள் கார்ப்பரேட் விவசாயத்தில் ஈடுபடத் தேவையான அளவுக்கு இந்தியாவில் மிக எளிதில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் விளைச்சலுக்கு கிடைக்கும் சாத்தியம் உள்ளது. இந்தியாவின் நிலப்பரப்பும், வானிலையும் அதற்கேற்ற சூழலை ஏற்படுத்தி தருகின்றன. இதன் மூலம் விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக வேலைவாய்ப்பும், பொருளாதார வாழ்வாதாரமும் கிடைக்கிறது.

அதோடு விவசாயிகள் விவசாயத் தொழிலில் சந்திக்கக் கூடிய பல அடிப்படை பிரச்சினைகளை கார்ப்பரேட் விவசாயம் சரிசெய்துவிடுகிறது. விதை தருகிறது, நல்ல மகசூல் பெறுவதற்கு தேவையான அனைத்து எற்பாடுகளையும் பயிற்சிகளையும் வழங்குகிறது. மேலும், பயிரிடல் முறை, பாதுகாப்பு முறை அதை விட முக்கியமாக சந்தைப்படுத்துதல் என அனைத்தையும் நிறுவனமே வழங்குகிறது. அதேசமயம் இதுபோன்ற ஒப்பந்த விவசாயத்தில், சந்தை ஏற்ற இறக்கங்களைக் காட்டி நிர்ணயிக்கப்பட்ட விலையைக் குறைக்கவும் முடியாது என்பதால், உத்தரவாதமான வருமானம் விவசாயிகளுக்குக் கிடைக்கும்.

விவசாயிகளுக்கான வாழ்வா தாரத்தை உறுதி செய்ய அரசுகள் தவறும் நிலையில், வளர்ச்சியின் பொருட்டு வளர்ந்துவரும் பெரு நிறுவனங்களால் கிடைக்கும் இதுபோன்ற வாய்ப்புகளை விவசாயிகளால் உதாசீனப்படுத்திவிட முடியாது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close