[X] Close

'நாதூராம் கோட்சே தேசப்பற்றாளர்'- பாஜக வேட்பாளர் பிரக்யா தாக்கூர் சர்ச்சைக் கருத்து: ஏற்க கட்சி மறுப்பு


  • kamadenu
  • Posted: 16 May, 2019 17:33 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசப்பற்றாளர் என்று மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளியும், பாஜக வேட்பாளருமான பிரக்யா சிங் தாக்கூர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

மத்தியப்பிரதேசம் போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் பிரக்யா சிங் தாக்கூர் போட்டியிடுகிறார். ஆனால் பிரக்யாவின் கருத்தை ஏற்க மறுத்துள்ள பாஜக, அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறியுள்ளது.

அகர் மால்வா பகுதியில் பாஜக வேட்பாளர் மகேந்திர சோலங்கிக்கு ஆதரவாக இன்று பிரக்யா தாக்கூர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவரிடம், சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கோட்சே ஒரு தீவிரவாதி என்று பேசியது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த பிரக்யா சிங் தாக்கூர் " நாதூராம் கோட்சே ஒரு தேசபற்றாளர். தீவிரவாதி என்று கோட்சேவை அழைப்பவர்கள், நோக்கத்தை பார்க்க வேண்டும். இவ்வாறு பேசுபவர்களுக்கு இந்த தேர்தலில் பதிலடி கிடைக்கும். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து எனக் கூறிய கமல்ஹாசனுக்கு இதுதான் பதில் " எனத் தெரிவித்தார்.

ஆனால், பிரக்யா சிங் தாக்கூர் கருத்து குறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காத மத்தியப்பிரதேச பாஜக , மகாத்மா காந்தியை கொன்றவர் தேசபற்றாளர் என ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

அதேசமயம். பாஜக செய்தித்தொடர்பாளர் நரசிம்ம ராவ் வெளியிட்ட அறிக்கையில், " பிரக்யா சிங் தாக்கூர் கருத்தை பாஜக ஏற்காது. அவரின் கருத்துக்கு கட்சி தலைமையிடம் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறது. பிரக்யா தாக்கூர் தனது கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும். விளக்கத்தையும் கட்சியிடம் அளிக்க வேண்டும் " எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், " மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை தேசப்பற்றாளர் என்கிறார்கள், தியாகியான ஹேமந்த் கர்கரேவை துரோகி என்று கூறுகிறார்கள். வன்முறை மற்றும் தியாகிகளை அவமதிப்பது பாஜகவின் டிஎன்ஏ " என்று தெரிவித்துள்ளார்.

ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி ட்விட்டரில் கூறுகையில், " பிரக்யா தாக்கூரை பிரமதர் மோடி பாராட்டி, புகழ்ந்து பேசியதை நினைவிருக்கிறதா. இது நிச்சயம் பிரக்யா தாக்கூரின் சொந்த கருத்து அல்ல. பாஜகவின் நிலைப்பாடு. அடுத்த சில ஆண்டுகளில் ஸ்ரீ ஸ்ரீ கோட்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரைப்பார்கள்" எனத் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close