[X] Close

நாங்கள் உயிருடன் இருகும்வரை காஷ்மீரை இந்தியாவிடமிருந்து யாரும் பிரிக்க இயலாது: அமித் ஷா உறுதி


  • kamadenu
  • Posted: 16 May, 2019 17:19 pm
  • அ+ அ-

-ஏஎன்ஐ

பாஜக உயிர்ப்புடன் உள்ளவரையிலும் அதன் தலைவர்கள் உயிருடன் இருக்கும் வரையிலும் எவராலும் காஷ்மீரை இந்தியாவிடமிருந்து பிரிக்க இயலாது என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பாலியா பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அமித் ஷா, "காஷ்மீர் மாநிலத்துக்கு தனியாக பிரதமர் இருக்க வேண்டும் என்று ஒமர் அப்துல்லா கூறுகிறார். ஒரு நாட்டுக்கு எப்படி இரண்டு பிரதமர்கள் இருக்க இயலும். இவரைப் போன்றோர் காஷ்மீர் இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர். காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க இயலாது என்பதை ராகுல் காந்தியும், ஒமர் அப்துல்லாவும் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

பாஜக தலைவர்கள் உயிருடன் இருக்கும்வரை காஷ்மீரை யாரும் இந்தியாவிடமிருந்து பிரிக்க இயலாது. பிரதமராக மோடியை மீண்டும் தேர்வு செய்யுங்கள்; நாங்கள் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குகிறோம். (சட்டப்பிரிவு 370 காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாகும்).

அதேபோல், காங்கிரஸ் தேசதுரோக தடுப்புச் சட்டத்தை நீக்குவது குறித்து கனவு காண்கிறது. பாஜக அதை ஒருபோதும் அனுமதிக்காது. ஜாகிர் நாயக் போன்றவர்கள் பயங்கரவாதத்தைப் பரப்பி வந்தனர். அவர்கள் மோடிக்கு அஞ்சிதான் நாட்டை விட்டே வெளியேறினர்.

அதனால்தான், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் இந்தியா வருவேன் என ஜாகிர் நாயக் கூறிக்கொண்டிருக்கிறார். அது ஒருபோதும் நடக்காது. இந்தியாவில் அவர் கால்வைத்தவுடனேயே கைது செய்வோம்.

நீங்கள் எல்லோரும் வளர்ச்சிக்காக வாக்களிக்க வேண்டாம். தேசப் பாதுகாப்புக்காக வாக்களியுங்கள். ராகுல் காந்தியின் குரு சாம் பித்ரோடா வேண்டுமானால் புல்வாமா தாக்குதல் போன்றவை எப்போதும் நடப்பதுதான் அதற்கு எதற்கு வான்வழி தாக்குதல் எனக் கேட்கலாம். ஆனால் பாஜகவால் அப்படி அணுக இயலாது. இந்திய எல்லைக்குள் அமைதியை சீர்குலைக்க நினைப்பவர்களை மன்னிக்க முடியாது. பாகிஸ்தான் ஒரு புல்லட்டை வெடித்தால் நாங்கள் பதிலுக்கு வெடிகுண்டை வீசுவோம்.

பாஜகவுக்கு வாக்களித்தால் உத்தரப் பிரதேசத்தில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக்குவோம். மோடி - யோகி உதவியுடன் இதை செய்து முடிப்போம்.

பாஜக ஆட்சியில் 8 கோடி வீடுகளுக்கு கழிவறை வசதி கிடைத்துள்ளது. 2.5 கோடி ஏழைகளுக்கு வீடு கட்டித் தரப்பட்டுள்ளது. 2.35 கோடி மக்கள் மின் வசதி பெற்றுள்ளனர். 50 கோடி மக்கள் மருத்துவக் காப்பீடு உதவி பெற்றுள்ளனர். எனவே, மீண்டும் பாஜகவுக்கே வாக்களியுங்கள்" என்றார்.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி, பாஜக கூட்டணி, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. மிக அதிகமான மக்களவைத் தொகுதிகள் கொண்ட உ.பி.யில் 7 கட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்டமாக மே 19-ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் 13 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close