[X] Close

ஊரடங்கு உத்தரவையும் பாராமல் பிரசவ வலியால் துடித்த பெண்ணை ஆட்டோவில் அழைத்துச் சென்று காப்பாற்றிய நபர்: இந்து-முஸ்லிம் ஒற்றுமையை அடையாளம் காட்டிய நெகிழ்ச்சிச் சம்பவம்


  • kamadenu
  • Posted: 16 May, 2019 16:31 pm
  • அ+ அ-

-பிடிஐ

அசாம் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவையும் பாராமல் தன் ஆட்டோவை எடுத்த மக்பூல் என்பவர்  பிரசவ வலியால் துடித்த பெண்ணை தன் ஆட்டோவில் ஏற்றிச் சென்று சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்த நெகிழ்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது.

 

அஸாம் மாநிலம் ஹைலகண்டியில் மதக்கலவரம் நடந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் கடந்த ஞாயிறன்று இந்தக் குழந்தை பிறந்தது. அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தைப் பிறந்தது. ‘சாந்தி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

இதில் மிகவும் உணர்வுபூர்வமான விஷயமாகப் பார்க்கப்படுவது அந்த ஆட்டோ ஓட்டுநர் ஒரு முஸ்லிம், பிரசவ வலியால் துடித்தவர் ஒரு இந்துப் பெண். ஆட்டோவில் வாயில் பிரார்த்தனை செய்த படியே விரைவாகச் செலுத்தி மருத்துவமனைக்கு குறித்த நேரத்தில் கொண்டு சேர்த்துள்ளார் முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர்.

 

புதிய குழந்தையின் தாய் பெயர் நந்திதா, தந்தை ரூபன் தாஸ் ஆவார். இந்த நெகிழ்ச்சிச் சம்பவத்திற்குப் பிறகு மாவட்ட போலீஸ் உயரதிகாரி மோனீஷ் மிஸ்ரா துணையுடன் ஹைலகந்தி உதவி ஆணையர் கீர்த்தி ஜல்லி பெற்றோரையும், குழந்தையும் போய் பார்த்தார். பிறகு “இத்தகைய இந்து - முஸ்லிம் ஒற்றுமை உணர்வுக்கான உதாரணங்கள் இன்னும் நமக்கு அதிகம் தேவை” என்றார்.

 

ஆட்டோ ஒட்டுநர் மக்பூல், இவர் ரூபன் வீட்டருகில் வசிப்பவர், நண்பர். அங்கு மதக்கலவரம் ஏற்பட்ட சூடு அணைவதற்குள்ளாகவே இந்துப் பெண்ணை பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு இட்டுச் சென்றுள்ளார். இதற்காக கமிஷனர் மக்பூலை பாராட்டினார்.

 

மதக்கலவர பகுதியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2 நாட்களுக்குப் பிறகுதான் ரூபன் தன் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறார் ஆம்புலன்ஸ் வேண்டும், யாராவது உதவுங்கள் என்று கதறியுள்ளார்.  மனைவியிடமும், “கவலைப் படாதே நிச்சயம் யாராவது ஒருவர் நமக்கு உதவ முன்வருவார்” என்று ஆறுதல் கூறியுள்ளார்.

 

ராஜ்யேஸ்வர்பூரிலிருந்து மருத்துவமனை சில கிமீ தூரத்தில் உள்ளது. ஒருவரும் உதவிக்கு வரவில்லை நந்திதாவுக்கு பிரசவ வலி அதிகரித்தது.  அந்தச் சமயத்தில்தான் அண்டை விட்டில் இருந்த மக்பூல் தன் நண்பருக்கு ஏற்பட்ட இக்கட்டை உணர்ந்து ஆட்டோவை எடுத்தார்.

 

விரிச்சோடிக் கிடந்த சாலையில் வேகமாகச் சென்றார் மக்பூல், ஆனாலும் குறித்த நேரத்துக்கு மருத்துவமனை சென்று விட முடியுமா என்ற கவலையும் அவருக்கு இருந்தது.

 

“நான் அவர்களுக்கு ஆறுதல் கூறினேன், போய் விடலாம் ஒன்றும் ஆகாது என்று கூறினேன், ஆனால் மனதிற்குள் நானும் கடவுளை வேண்டிக்கொண்டிருந்தேன்” என்கிறார் மக்பூல்.

 

ஒருவழியாக மருத்துவமனைக்கு குறித்த நேரத்தில் ஆட்டோ வந்தது, மாலை 5.30 மணிக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது.

 

ஊரடங்கு உத்தரவு, மதக்கலவரத்தில் பிறந்ததால் குழந்தைக்கு சாந்தி என்று பெயரிட்டுள்ளனர்.

 

மதக்கலவரக் காலத்தில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கான மிகச்சிறந்த உதாரணம் இந்த நெகிழ்ச்சித் தருணம் என்று மருத்துவமனை நிர்வாகி பாஸ்கரதாஸ் நெகிழ்ச்சியுடன் கூறினார்.  அந்த ஊரில் அமைதித் திரும்புவதற்காகப் பிறந்த குழந்தை இது என்றும் மத நல்லிணக்கத்தைப் பேணிகாக்கப் பிறந்த குழந்தை என்றும் அந்தக் குழந்தை இப்போதே புகழடைந்து வருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close