[X] Close

'மே.வங்கத்தில் ஜனநாயகம், குண்டர்கள் ராஜ்ஜியமாக மாறிவிட்டது': மம்தா மீது பிரதமர் மோடி கடும் தாக்கு


  • kamadenu
  • Posted: 16 May, 2019 10:46 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

மேற்கு வங்கத்தின் கலாச்சாரத்தை அழித்து வரும் மம்தா பானர்ஜியால், மாநிலத்தின் ஜனநாயகம் என்பது குண்டர்கள் ராஜ்ஜியமாக மாறிவிட்டது என்று பிரமதர் மோடி கடுமையாக விமர்சித்தார்.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கொல்கத்தாவில் பங்கேற்ற பேரணியில் வன்முறை வெடித்தது அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் மோடி இவ்வாறு கடுமையாக பேசியுள்ளார்.

டைமண்ட் ஹார்பர், நார்த் 24 பர்கானா தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

மாநிலத்தில் அவசரநிலை இருப்பதைப் போன்று சூழலை மம்தா பானர்ஜி உருவாக்கிவிட்டார். மாநிலத்தில் உள்ள அனைத்தையும் அழிக்கும் பணியில் மம்தாவின் அரசு ஈடுபட்டு வருகிறது. மக்களின் தீர்ப்பு மட்டும்தான் அவரை ஆட்சியில் இருந்து அகற்ற முடியும். பாஜவுக்கு எதிராக மம்தா போரிடவில்லை, மக்களுக்கு எதிராக போரிடுகிறார்.

மாநிலத்தில் மம்தாவின் ஆட்சியின் நாட்கள் மக்களால் எண்ணப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் உள்ள 42 இடங்களிலும் பாஜகவை வெற்றி பெற வைக்க மக்கள் உதவுவார்கள்.

மேற்கு வங்கத்தில் மம்தாவின் ஆட்சியில் ஜனநாயகம்  என்பது குண்டர்கள் ராஜ்ஜியமாக மாறிவிட்டது.  இந்த குண்டர்கள் ராஜ்ஜியம் நீண்டநாட்களுக்கு இருக்காது. திரிணாமுல் குண்டர்கள் மக்களின் வாழ்க்கையை நரகமாக மாற்றிவிட்டார்கள்.

மம்தா பானர்ஜிக்கு மரியாதை அளித்து மக்கள் அவரை முதல்வராக்கி அழகுபார்த்தார்கள். ஆனால், அவரோ அதிகாரப் பசி எடுத்து ஜனநாயகத்தை அழிக்கிறார். ஆனால், மம்தா பானர்ஜி மட்டுமே அதிகாரத்தை வைத்துக்கொள்ளக் கூடாது.

கொல்கத்தாவில் நடந்த சம்பவங்களை, வன்முறைகளை தொலைக்காட்சியில் இந்த தேசமே பார்த்தது. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பேரணியில் அவர் குண்டர்களால் தாக்கப்பட்டதை மக்கள் பார்த்தார்கள். இந்த சம்பவத்துக்குப்பின் ஆர்வத்துடன் தேர்தல் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.

modi1.jpg 

மேற்கு வங்கத்தில் பாஜக வளர்ச்சி அடைவதைப் பார்த்து மம்தா அச்சப்படுகிறார். 2019-ம் ஆண்டில் மம்தாவின் ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். மாநிலத்தில் எந்தமாதிரியான வன்முறைகளை மம்தா அரங்கேற்றினாரோ அதே வன்முறையால் பாஜகவுக்கு 42 இடங்கள் கிடைக்கும், மக்களவையில் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றும்.

மம்தாவின் சர்வாதிகார ஆட்சியை மனதில் வைத்து அதற்கு மேற்கு வங்க மக்கள் முடிவுகட்டுவார்கள். பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டால், ஊடுருவல்காரர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள். அகதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு, குடிமக்கள் அந்தஸ்து வழங்கப்படும்.

சிட்பண்ட் ஊழலில் மக்களின் பணத்தை மம்தா கொள்ளையடித்துள்ளார். இதற்கு விளக்கம் கேட்டால், எங்கள் மீது அவதூறு பேசுகிறார். ஸ்ரீ ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், நேதாஜி ஆகியோரின் பிறந்த மண் மேற்கு வங்கம். மம்தாவின் செயல்பாடுகளை மக்கள் பொறுக்கமாட்டார்கள். சரியான நேரத்தில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

மாநிலத்தில் எதிர்க்கட்சியினர், பாஜகவினர் பேரணி நடத்தவும், வேட்பாளர்கள் கூட்டம் நடத்தவும் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த தேசத்தின் பிரதமர் மீது மம்தாவுக்கு நம்பிக்கை இல்லை. துல்லியத்தாக்குதல், விமானத் தாக்குதல் மீதும் நம்பிக்கை இல்லாமல் கேள்வி கேட்கிறார். பாகிஸ்தான் பிரதமர் போன்று பேசுகிறார். இதுதான் ஜனநாயகமாக.

உங்களுக்கு என்ன ஆகிவிட்டது மம்தா. நீங்கள் நல்ல ஓவியர் என்று என கேள்விப்பட்டிருக்கிறேன், உங்கள் ஓவியம் பலகோடிக்கு சாரதா குழுமத்தால் வாங்கப்பட்டதை அறிந்திருக்கிறேன். நான் உங்களிடம் கேட்பதெல்லாம், என்னைப் பற்றி ஒரு மோசமான ஓவியத்தை தீட்டி, என் வீட்டுக்கு வந்து பரிசாக தாருங்கள். அதை என் வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வைத்திருப்பேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close