[X] Close

அமித் ஷா பிரச்சாரத்தின்போது கொல்கத்தாவில் வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்ட விவகாரம்: ஆதாரங்களை வெளியிட்டு பாஜக, திரிணமூல் காங்கிரஸ் பரஸ்பரம் புகார்


  • kamadenu
  • Posted: 16 May, 2019 08:24 am
  • அ+ அ-

மேற்கு வங்க மாநிலத்தில் வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவும் திரிணமூல் காங்கிரஸும் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு பரஸ்பரம் புகார் கூறியுள்ளன.

மேற்கு வங்க மாநிலத்தில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை நடந்து முடிந்த 6 கட்ட தேர்தலின்போதும் பாஜகவினருக்கும் திரிணமூல் காங்கிரஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், இறுதி கட்டமாக 9 தொகுதிகளில் வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, பாஜக தலைவர் அமித் ஷா தலைநகர் கொல்கத்தா வில் நேற்று முன்தினம் வாகனத்தில் பேரணியாக சென்றபடி சாலைவழி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கல்லூரி சாலையில் சென்றபோது, கொல் கத்தா பல்கலைக்கழகம் மற்றும் வித்யாசாகர் கல்லூரிக்கு வெளியே திரிணமூல் காங்கிரஸார் (டிஎம்சி) ‘அமித் ஷாவே திரும்பிப் போ’ என்ற வாசகம் அடங்கிய பதாகை களுடன் கோஷம் எழுப்பி உள்ள னர்.

அமித் ஷா சென்ற வாகனம் மீது கற்களை வீசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால், இரு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர் களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் கல்லூரி வளாகத்தில் இருந்த சமூக சீர்திருத்தவாதி ஈஸ்வர்சந்திர வித்யாசாகரின் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை வெடித்தது. பின்னர் போலீஸார் தடியடி நடத்தி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்துக்கு அமித் ஷாவும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் பரஸ்பரம் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்நிலையில் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக, இருதரப்பின ரும் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை நேற்று வெளியிட்ட னர்.

காயமின்றி தப்பினேன்

டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சித் தலைவர் அமித் ஷா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொல்கத்தா மோதல் சம்பவம் தொடர்பான சில புகைப்படங்களை வெளியிட்டு கூறும்போது, “கொல்கத்தாவில் பேரணி சென்றபோது, திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் என் மீது தாக்குதல் நடத்தினர். ஆனால் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு வழங்கியதால் நான் காயமின்றி தப்பினேன். மேலும் பிரதமர் மோடி மற்றும் என்னுடைய படம் அடங்கிய போஸ்டர்களை கிழித்தனர்.

வித்யாசாகர் கல்லூரி வளாகம் மூடப்பட்டிருந்தது. எங்கள் பேரணி சாலையில் நடைபெற்றது. இவ்வாறு இருக்கும்போது, கல்லூரி வளாகத்தில் பூட்டிய அறைக்குள் இருந்த வித்யாசாகர் சிலையை பாஜகவினர் எப்படி உடைத்திருக்க முடியும்? அவர்களே சிலையை உடைத்துவிட்டு பழியை எங்கள் மீது சுமத்துகிறார்கள்.

மக்களவைத் தேர்தலில் ஒரு மாநிலத்தில் உள்ள 42 இடங் களில் மட்டும்தான் மம்தா கட்சி போட்டியிடுகிறது. ஆனால் பாஜகவோ நாடு முழுவதும் போட்டியிடுகிறது. மேற்குவங்கத் தில் மட்டுமே வன்முறை நடை பெறுகிறது என்றால் அதற்கு திரிண மூல் காங்கிரஸ்தான் காரணம்” என்றார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான டெரிக் ஓ.பிரை யன் டெல்லியில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப் போது, கொல்கத்தா வன்முறை தொடர்பான வீடியோ காட்சியை வெளியிட்டார். பின்னர் அவர் கூறும் போது, “கொல்கத்தாவில் நடந்த வன்முறையின்போது, கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஸ்வர்சந்திர வித்யாசாகரின் மார்பளவு சிலையை பாஜகவினர் உடைத்தனர். பாஜகவினர் என்ன செய்தார்கள் என்பதை இந்த வீடியோ தெளிவாக விளக்குகிறது. அத்துடன் அமித் ஷா பொய் சொல்கிறார் என்பதற்கு சான்றாகவும் இருக்கும்.

திரிணமூல் காங்கிரஸ் மற்றும் போலீஸாருடன் சண்டை போடு வதற்காக, கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வருமாறு பாஜகவினருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரமும் உள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஆதாரங்களுடன் புகார் செய்துள்ளோம்” என்றார்.

டி.பி.யான வித்யாசாகர் படம்

வித்யாசாகர் சிலை சேதப் படுத்தப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட திரிணமூல் கட்சியினர், தங்கள் ட்விட்டர் பக்கத்தின் டி.பி.யாக (டிஸ்ப்ளே பிக்சர்) வித்யாசாகர் படத்தை வைத்துள்ளனர். அக்கட்சி யின் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்திலும் வித்யாசாகர் படம் டிபியாக வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வித்யாசாகர் கல்லூரிக்கு சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, உடைக்கப்பட்ட சிலையைப் பார்வையிட்டார். மேலும் இந்த வன்முறை சம்பவத் தைக் கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் சார்பில் கல்லூரி சாலையில் நேற்று மாலை பேரணி நடைபெற்றது.

இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறும்போது, “அமித் ஷா தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார். அனைத் துக்கும் மேற்பட்டவரா அவர்? அவர் என்ன கடவுளா? அவருக்கு எதிராக யாரும் போராடக் கூடாதா?” என்றார்.

மவுன போராட்டம்

வன்முறை சம்பவத்தைக் கண்டித்து, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் பாஜக சார்பில் மவுனப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜிதேந்திர சிங், விஜய் கோயல் மற்றும் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் தங்கள் உதட்டின் மீது விரலை வைத்தபடி பங்கேற்றனர். சிலர் கறுப்பு துணியைக் கட்டிக்கொண்டு பங் கேற்றனர். அப்போது, ‘வங்கத்தைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி இருந்தனர்.

பிரச்சாரத்தை ஒருநாள் முன்கூட்டியே முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

மேற்கு வங்க மாநிலத்தில் பிரச்சாரத்தின்போது இரு கட்சியினரிடையே வன்முறை வெடித்ததையடுத்து, பிரச்சாரத்தை ஒருநாள் முன்கூட்டியே இன்றுடன் முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், பாஜக தலைவர் அமித் ஷா நேற்று முன்தினம் வாகனத்தில் இருந்தபடி சாலைவழி பிரச்சாரம் செய்தபோது பாஜக - திரிணமூல் காங்கிரஸார் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இருதரப்பினரும் புகார் செய்தனர்.

இந்நிலையில், வன்முறை சம்பவங்களை காரணம் காட்டி, கடைசி கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று இரவு 10 மணியுடன் முடிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிய இருந்த நிலையில், 1 நாள் முன்னதாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையம் அரசியல் சாசன சட்டத்தின் 324-வது பிரிவை முதன் முறையாக பயன்படுத்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தப் பிரிவு, தேர்தல் தொடர்பான செயல்பாட்டை கண்காணித்தல், இயக்குதல், கட்டுப்படுத்துதல் ஆகிய அதிகாரங்களை தேர்தல் ஆணையத்துக்கு வழங்கி உள்ளது. மேலும் முதன்மைச் செயலாளர் (உள்துறை) மற்றும் சிஐடி கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஆகியோரை பணியிலிருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

யார் இந்த வித்யாசாகர்

மேற்குவங்க மாநிலம், மேதினிபூர் மாவட்டம், பிர்சிங்கா கிராமத்தில் 1820-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி ஈஸ்வர் சந்திர பந்தோபாத்யாய் பிறந்தார். 1839-ல் சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றார். வேதங்கள், சம்ஸ்கிருத இலக்கியங்களையும் பயின்றார். கொல்கத்தா சம்ஸ்கிருத கல்லூரி இவருக்கு ‘வித்யாசாகர்’ என்ற பட்டத்தை வழங்கியது. இதையடுத்து இவர் பெயர் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் ஆனது.

தத்துவவாதி, கல்வியாளர், எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகங்களைக் கொண்டிருந்தார். பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றினார். வங்க மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் இவரும் ஒருவர். இந்தியாவில் பெண்கள் மேம்பாட்டுக்காக பாடுபட்டார். குறிப்பாக, விதவைகள் மறுமண சட்டத்தை இயற்றுமாறு அப்போது ஆட்சி செய்த பிரிட்டன் அரசை கட்டாயப்படுத்தினார். இவர் தனது பெயரில் 1872-ல் வித்யாசகர் கல்லூரியை தொடங்கினார். 1891 ஜூலை 29-ல் மறைந்தார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close