[X] Close

மோடி மீண்டும் பிரதமராக ஆர்எஸ்எஸ் ஆதரவு தொடரும்: ஆதரவளிக்காது என்று மாயாவதி கூறியதற்கு திட்டவட்ட பதில்


  • kamadenu
  • Posted: 16 May, 2019 08:15 am
  • அ+ அ-

-ஆர்.ஷபிமுன்னா

பாஜக கூட்டணி வென்றால் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்சங்க் (ஆர்எஸ்எஸ்) தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இது மாயாவதியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளது.

பாஜகவின் தாய் அமைப்பாக ஆர்எஸ்எஸ் கருதப்படுகிறது. இந்த அமைப்பில் சில ஆண்டுகள் பணியாற்றியவர்கள் கட்சிப் பணிக்கு அனுப்பப்படுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, பாஜக சார்பில் பிரதமர், மாநில முதல்வர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவு பெற்றவர்களாகவே உள்ளனர். அந்த வகையில், நரேந்திர மோடியும் முதலில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் பணியாற்றினார். பின்னர் கட்சிப் பணிக்கு அனுப்பப்பட்டு குஜராத் முதல்வராகி, அதன் பிறகு பிரதமரானார்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இதில் பாஜக வெற்றி பெற்றாலும் மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆதரவு அளிக்காது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்திருந்தார். இதுபோல சில மாதங்களுக்கு முன்புகூட, தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமானால், மோடிக்கு பதில் வேறு ஒருவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படலாம் என செய்தி வெளியானது. இதில், மத்திய தரை மற்றும் கடல்வழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியானது. இதுபோல, 2004 மக்களவைத் தேர்தலில் ஒரு முயற்சி எடுக்கப்பட்ட போது, பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பையே இழந்தது.

இதுகுறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, “மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு பாஜக வளர முக்கியக் காரணமாக இருந்தவர் எல்.கே.அத்வானி. எனவே, 2004 தேர்தலில் மீண்டும் வெற்றி உறுதி என நம்பினோம். அவ்வாறு வெற்றி பெற்றால் அத்வானியை பிரதமராக்க முடிவு செய்யப்பட்டது. இந்தத் தகவலை அறிந்ததும், அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய், தனது தீவிர பிரச்சாரத்தை குறைத்துக் கொண்டார். இதன் காரணமாக பாஜக கூட்டணிக்கு எதிர்பாராத தோல்வி ஏற்பட்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. இதில், தொகுதி வித்தியாசமும் பெரிய அளவில் இல்லை. இந்த நிலை மீண்டும் வந்து விடக்கூடாது என அஞ்சி தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். மேலும் பாஜக கூட்டணி வென்றால், மோடி மீண்டும் பிரதமராக எங்கள் ஆதரவு தொடரும்” என்றனர்.

அதேநேரம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால், புதிய கட்சிகளின் ஆதரவு தேவைப்படும். அவ்வாறு ஆதரவளிக்க முன்வரும் சில கட்சிகள் மோடியை பிரதமராக ஏற்க மறுக்கவும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், மோடிக்கு பதில் வேறு ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு இல்லாமல் மோடியே அப்பதவியில் அமர்ந்தாலும், பதவிக் காலத்தை முழுமையாக அவரால் பூர்த்தி செய்ய முடியாது என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கருதுகின்றனர். இடையில், மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை பதவியில் இருந்து இறக்கிவிட்டு வேறு ஒருவரை பிரதமர் பதவியில் ஆர்எஸ்எஸ் அமர்த்தவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக அந்த அமைப்பு, நாக்பூரில் உள்ள தலைமையகத்தில் செப்டம்பர் மாதம் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விஜயதசமி நிகழ்வை பயன்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாளில் ஆர்எஸ்எஸ் தலைவர் ஆற்றும் உரையில் ஏதாவது ஒரு முக்கிய அறிவிப்பு இடம்பெறுவது வழக்கம் என்பது நினைவுகூரத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close