[X] Close

சந்தியாவும் 45 போர்ட்டர்களும்: மூன்று குழந்தைகளுக்காக சுமை தாங்கியான தாய்


mp-woman-works-as-porter-to-raise-her-3-kids

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 May, 2018 17:20 pm
  • அ+ அ-

போரட்டர் சந்தியா, இவரைப் பார்க்க வேண்டுமானால் பரபரப்பாக இருக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் கட்னி ரயில் நிலையத்துக்குத்தான் செல்ல வேண்டும்.

அப்படி என்ன ஸ்பெஷல். அவர் என்ன இந்தியாவின் முதல் பெண் போர்ட்டரா என்று கேட்கிறீர்களா? அப்படி இப்படி என்றெல்லாம் எதுவும் இல்லை. ஆனால், மூன்று குழந்தைகளையும் அவர்களுடன் வயதான தனது மாமியாரையும் காப்பாற்ற அவர் பம்பரமாக சுழன்று உழைப்பதே அவர் மீது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கட்னி ரயில் நிலையத்துக்குச் சென்று பாருங்கள். எங்கெங்கும் முகம் தான் தெரியும். அந்தக் கூட்ட நெரிசலுக்குள் ஒவ்வொரு முறை ரயில் வந்து நிற்கும்போது சிவப்பு உடையில் போர்ட்டர்கள் வந்து நின்று வாடிக்கையாளர்களை சேகரிப்பர். அந்த ரயில் நிலையத்தில் 45 போர்ட்டர்கள் இருக்கின்றனர். அவர்களில் சந்தியாவின் எண் 36. சந்தியா மற்ற போர்ட்டர்களுக்கு சற்று சளைத்தவர் அல்ல. பெரும் சுமையை தலையிலும், தோளிலும் சுமந்துகொண்டு அதை பத்திரமாக பயணிகளின் இருக்கையில் சேர்த்துவிடுவார்.

சந்தியாவுக்கு 30 வயதுதான் ஆகிறது. ஆனால், அவரது கணவர் இறந்துவிட்டார். அவர் தாங்கிய குடும்பச் சுமை சந்தியாவின் தலையில் விழுந்தது. 3 குழந்தைகள் மாமியார் என பெருங் குடும்பத்தைத் தாங்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது. தன் கணவர் பார்த்த வேலையை செய்யவே அவர் விரும்பினார். கட்னி ரயில் நிலைய அதிகாரிகளைச் சந்தித்து ஒருவழியாக டோக்கன் எண் 36-ஐப் பெற்று போர்ட்டர் ஆகிவிட்டார்.

சர்வசாதாரணமாக தினமும் 100 கி.மீ., பயணம் செய்து வேலைக்குச் செல்கிறார். ஜபல்பூர் ரயில் நிலையத்திலேயே வேலை வாங்கிவிட வேண்டும் என்பதுதான் அவரது ஒரே கோரிக்கையாக இருக்கிறது. சந்தியா உழைக்கத் தயங்கவில்லை ஆனால், உழைப்புக்கான நேரத்தை பயணம் கொல்வதை நினைத்தே அவர் வருந்துகிறார்.
சந்தியாவின் கோரிக்கை ஜபல்பூர் ரயில்வே அதிகாரிகளுக்குக் கேட்டால் அவரது சுமையை கொஞ்சம் இறக்கிவைத்ததுபோல் இருக்கும்தானே.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close