[X] Close

மோதல் எதிரொலி: ஈஷ்வர சந்திர வித்யாசாகர் படத்தை ட்விட்டர் டிபி-யாக மாற்றிய மம்தா பானர்ஜி


  • kamadenu
  • Posted: 15 May, 2019 13:41 pm
  • அ+ அ-

-ஏஎன்ஐ

மேற்குவங்கத்தில் பாஜகவினர் - திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் மோதலில் ஈஷ்வர சந்திர வித்யாசாகரின் சிலை சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரது படத்தை ட்விட்டர் டிபி (டிஸ்ப்ளே பிக்சராக) வைத்துள்ளனர் திரிணமூல் கட்சியினர்.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் ‘அமித்ஷா திரும்பிப்போ’ என்ற பதாகைகளைக் காட்டி கோஷமிட்டனர்.

இதனால்,  ஆளும் திரிணமூல் காங்கிரஸார் தொண்டர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பல்லைக்கழக வளாகத்தில் உள்ள ஈஷ்வர சந்திர வித்யாசாகரின் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது.

போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். கல்வீச்சு தாக்குதல், போலீஸ் தடியடியில் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து மம்தாவும் அமித் ஷாவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மம்தா பானர்ஜி உள்ளிட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் ட்விட்டரில் தங்கள் டிஸ்ப்ளே பிக்சர் எனப்படும் சுய படத்தில் ஈஷ்வர் சந்திர வித்யாசகரின் படத்தை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக மம்தா தனது ட்விட்டரில் பாஜக குண்டர்கள் கொம்புகளைக் கொண்டு அடித்து ஈஷ்வர சந்திர வித்யாசாகரின் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். இது மிகப்பெரிய அவமானம்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் திரிணமூல் எம்.பி. டெரக் ஓ ப்ரெய்ன், "இந்த செயலைக் கண்டிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை. நானே வெட்கப்படுகிறேன்.

பாஜக குண்டர்கள் ஈஷ்வர் சந்திரரின் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். இது மேற்குவங்க மக்கள் அனைவருக்குமே வேதனை தரும் நிகழ்வு" எனக் கூறியுள்ளார்.

இவ்விகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் திரிணமூலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சூரஜ்வாலா கூறும்போது, "ஈஷ்வர சந்திர வித்யா சாகர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டிக்கிறோம்.

அவர் வங்காள மக்களின் அடையாளம் மட்டுமல்ல இந்த தேசத்தின் அடையாளம். இது நமது கலாச்சாரத்துக்கு எதிரான தாக்குதல். பிரதமர் மோடிக்கு அதிகாரப் பசி ஏற்பட்டுள்ளது. அதனாலேயே இந்திய கலாச்சாரத்துக்கு எதிராக செயல்படுகிறார்" என விமர்சித்துள்ளார்.

ஆனால், இவ்விவகாரத்தில் பாஜகவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகிறது. வித்யாசாகர் விதவைகள் மறுமணத்துக்காக போராடியவர். இவர் வங்காள மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close