[X] Close

புகைப்பட மார்ஃபிங் விவகாரம்; பாஜக பெண் நிர்வாகியை கைது செய்தது தன்னிச்சையானது: மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை


  • kamadenu
  • Posted: 15 May, 2019 12:56 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்த குற்றச்சாட்டில் பாஜக இளைஞர் அமைப்பின் தலைவர் பிரியங்கா சர்மா கைது செய்யப்பட்டது தன்னிச்சையானது என்று உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டும் 24 மணிநேரத்துக்கு பின் விடுவித்ததால், ஏன் மேற்கு வங்க அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அளிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்தது.

நியூயார்க்கில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா செய்திருந்த மேக்கப், ஆடை அலங்காரம் ஆகியவை பெரும் விமர்சனத்துக்கும், கிண்டலுக்கும் ஆளானது. அந்தப் புகைப்படத்தில் பிரியங்கா முகத்துக்குப் பதிலாக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி முகத்தை வைத்து மார்ஃபிங் செய்து, ஃபேஸ்புக்கில் பிரியங்கா சர்மா எனும் பெண் கடந்த 9-ம் தேதி வெளியிட்டார்.

ஹவுராவைச் சேர்ந்த பிரியங்கா சர்மா, பாஜகவின் இளைஞர் பேரவையின் தலைவராக இருந்து வருகிறார். முதல்வர் மம்தா பானர்ஜியை அவதூறு செய்யும் வகையில் புகைப்படம் வெளியிட்டது குறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் விபாஸ் ஹசாரா போலீஸில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து போலீஸார் பிரியங்கா சர்மா மீது ஐபிசி 500, 66ஏ, 67ஏ ஆகிய பிரிவின் கீழும், ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவில் வழக்கு தொடர்ந்து கடந்த 10-ம் தேதி பிரியங்கா சர்மாவைக் கைது செய்தனர். பிரியங்கா சர்மாவை 14 நாட்கள் சிறையில் அடைக்க ஹவுரா உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருவதால், பிரியங்கா சர்மாவின் குடும்பத்தினர் உயர் நீதிமன்றத்தை அணுக முடியவில்லை. இதையடுத்து, பிரியங்கா சர்மாவின் குடும்பத்தினர் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனுத்தாக்கல் செய்து அவசர வழக்காக விசாரிக்கக் கோரினர். மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.கே.கவுல் ஆஜராகினார்.

இந்த மனுவை விசாரித்த  விடுமுறைக்கால நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா ஆகியோர், உடனடியாக பிரியங்கா சர்மாவை விடுவிக்க உத்தரவிட்டு, அவர் விடுவிக்கப்படும்போது, மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டுச் செல்ல உத்தரவிட்டனர்

priyajpg.jpg 

ஆனால், நேற்று முழுவதும் பிரியங்கா சர்மா விடுவிக்கப்படாமல் இருந்ததால், இது தொடர்பாக பிரியங்கா சர்மாவின் சகோதரர் உச்ச நீதிமன்றத்தில் இன்று முறையிட்டு போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினார்.

இந்த மனு  விடுமுறைக்கால நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பிரியங்கா சர்மாவின் வழக்கறிஞர் கவுல் வாதிடுகையில், "உச்ச நீதிமன்றம் உடனடியாக பிரியங்கா சர்மாவை உடனடியாக விடுவிக்க நேற்று உத்தரவிட்டும், 24 மணிநேரம் சிறையில் அடைத்து வைத்திருந்தார்கள்" என்று குற்றம்சாட்டினார்.

அதற்கு மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், " பிரியங்கா சர்மா குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவு கிடைக்கத் தாமதமானதால், இன்று காலை 9.40 மணிக்கு விடுவித்தோம்" என்று தெரிவித்தார்.

அப்போது, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் மேற்கு வங்க அரசை கடுமையாகக் கண்டித்தனர். "நாங்கள் உடனடியாக பிரியங்கா சர்மாவை விடுவிக்கக் கோரி உத்தரவிட்டும் அதை நீங்கள் செய்யவில்லை. நாங்கள் நேற்று உங்கள்முன்புதானே உத்தரவு பிறப்பித்தோம். பின் ஏன் தாமதமானது?

முதலில் நீங்கள் பிரியங்கா சர்மாவை கைது செய்தது தன்னிச்சையானது என்பதற்கான முகாந்திரம் இருக்கிறது. இன்னமும் பிரியங்கா சர்மாவை விடுவிப்பதில் தாமதம் செய்தால், நீங்கள் (மேற்கு வங்க அரசு) நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸை எதிர்கொள்ள நேரிடும்" என எச்சரித்தனர்.

அதன்பின் பிரியங்கா சர்மாவின் சகோதரரிடம், பிரியங்கா சர்மா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாரா அல்லது இல்லையா என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு மேற்கு வங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரியங்கா சர்மா விடுவிக்கப்பட்டார் என்று பதில் அளித்தார்.

விடுமுறைக் காலம் முடிந்து ஜூலை மாதம் மீண்டும் இந்த மனுவை விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close