[X] Close

சமாஜ்வாதியில் இருந்து நீக்கப்பட்டவரின் வெற்றிக்காக உ.பி.யில் பிரச்சாரம் செய்த அகிலேஷ் யாதவ்


  • kamadenu
  • Posted: 15 May, 2019 08:00 am
  • அ+ அ-

-ஆர்.ஷபிமுன்னா

சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அப்சல் அகமது அன்சாரியை (65) கிரிமினல் பின்னணியால் கட்சியில் இருந்து நீக்கியவர் அகிலேஷ்சிங் யாதவ். தற்போது பகுஜன் சமாஜின் வேட்பாளராகி விட்ட அன்சாரிக்காக அகிலேஷ் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டிய கட்டாயமாகி விட்டது.

உத்தரபிரதேசத்தின் கிரிமினல்கள் பட்டியலில் இடம்பெற்ற அரசியல்வாதியாக இருப்பவர் அப்சல் அன்சாரி. இவர், 2004 மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளராக காஜிபூரில் போட்டியிட்டு பாஜகவின் மனோஜ்சின்ஹாவை சுமார் இரண்டரை லட்சம் வாக்குகளில் வென்றார். 2006-ல் தனது இளைய சகோதரரான முக்தார் அன்சாரியுடன் சேர்ந்து உ.பி. பாஜக தலைவர் கிருஷ்ணானந்த் ராய் கொலை வழக்கில் அப்சல் அன்சாரியும் சிக்கினார். இதனால் ஜாமீனில் இருக்கும் அப்சல் அன்சாரியை சமாஜ்வாதி நீக்கி விட்டது. பிறகு 2009-ல் தன் சகோதரர் முக்தார் அன்சாரியுடன் பகுஜன் சமாஜில்(பிஎஸ்பி) இணைந்தார். கிரிமினல் நடவடிக்கைகளை காரணம் காட்டி கட்சி தலைவர் மாயாவதியால் சகோதரர்கள் நீக்கப்பட்டனர். 2010-ல் கவுமி ஏக்தா தளம் எனும் அரசியல் கட்சியை இருவரும் துவக்கினர்கள். இதன் சார்பில் உ.பி.யில் 2012 சட்டப்பேரவை தேர்தலில் 43 தொகுதியில் போட்டியிட்டு இரண்டில் வென்றனர்.

2016-ல் கவுமி ஏக்தா தளம் கட்சியை சமாஜ்வாதியில் இணைக்க முயன்றனர். அப்போது, அதன் தலைவராகி விட்ட அகிலேஷ், கிரிமினல் நடவடிக்கைகளால் அன்சாரி சகோதரர்களை ஏற்கவில்லை. எனினும், இந்த மக்களவை தேர்தலில் தம் கட்சியை மாயாவதியின் பகுஜன் சமாஜில்(பிஎஸ்பி) மீண்டும் இணைந்து அதன் சார்பில் காஜிபூரில் மீண்டும் அப்சல் அன்சாரி போட்டியிடுகிறார். பகுஜன் சமாஜூடன் இணைந்து உ.பி.யில் மெகா கூட்டணி அமைத்துள்ளதால் அப்சல் அன்சாரிக்காக பிரச்சாரம் செய்ய வேண்டியக் கட்டாயம் அகிலேஷுக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை அகிலேஷ் காஜிபூர் தொகுதியில் அப்சலுக்காக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் மாயாவதியும் கலந்து கொண்டார்.

காஜிபூரில் அப்சலை எதிர்த்து பாஜக சார்பில் மனோஜ் சின்ஹா போட்டியிடுகிறார். இவர் 2014-ல் இதே தொகுதியில் அப்சலை தோற்கடித்தார். இதற்கு முன் 1996, 1999-லும் காஜிபூரின் பாஜக எம்பியாக மனோஜ் சின்ஹா இருந்தார். மத்திய தகவல் தொடர்பு அமைச்சராகவும், ரயில்வேதுறையின் இணை அமைச்சராகவும் இருக்கும் மனோஜ் சின்ஹா, உ.பி.யின் பாஜக முதல்வருக்கும் பேசப்பட்டவர். இதனால், உ.பி.யில் காஜிபூர் மிகவும் முக்கியமாகி விட்டது. காங்கிரஸ் சார்பில் அதன் ஜன் அதிகார் எனும் கூட்டணிக் கட்சியின் அஜீத் பிரதாப் குஷ்வாஹா என்பவர் போட்டியிட்டாலும் பிஎஸ்பி, பாஜகவிற்கு இடையே முக்கியப் போட்டி நிலவுகிறது.

அப்சல் அன்சாரியின் இளைய சகோதரரான முக்தார் அன்சாரியும் ஒரு கிரிமினல் அரசியல்வாதி. இவர் உ.பி.யின் மாவ் தொகுதியில் ஐந்தாவது முறையாக எம்எல்ஏவாக உள்ளார். பிஎஸ்பி, சுயேச்சை மற்றும் ஏக்தா தளம் ஆகியன சார்பில் முக்தார் சிறையில் இருந்தும் போட்டியிட்டு வென்றிருந்தார். இவரும் தம் கவுமி ஏக்தா தளம் துவக்குதவற்கு முன் பிஎஸ்பியில் இருந்தார். அன்சாரி சகோதரர்களுக்கு கிழக்கு உ.பி.யில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் செல்வாக்கு உள்ளது. இவர்கள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த முக்தார் அகமது அன்சாரியின் பேரன்களும் ஆவார். காஜிபூரில் கடைசிகட்டமாக மே 19-ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close