[X] Close

ரஃபேல் போர் விமான எண்ணிக்கையை குறைத்ததன் மூலம் தேச பாதுகாப்பில் சமரசம்: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 15 May, 2019 07:56 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்ததன் மூலம் தேசப் பாதுகாப்பில் மத்திய அரசு சமரசம் செய்து கொண்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜிவாலா நேற்று கூறியதாவது:

பிரான்ஸிடம் இருந்து 126 ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு முதலில் முடிவு செய்திருந்தது. ஆனால், பணத்தை மிச்சப்படுத்துவதற்காக, அந்த எண்ணிக்கை 36-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

நிதி நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரியே ஒப்புக் கொண்டிருப்பது மிகவும் வெட்கக்கேடானது. தேசப் பாதுகாப்பில் சமரசம் செய்துகொண்டு, போர் விமானங்களில் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், போலி தேசியவாதி நரேந்திர மோடியின் உண்மை முகம் வெளி உலகுக்கு தெரிந்துவிட்டது.

அதேபோல், பாஜக ஆட்சியின் கீழ், பெண்களின் பாதுகாப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹாபூரில் ஒரு பெண்ணை ரூ.10 ஆயிரத்துக்கு வாங்கி ஏராளமான ஆண்கள் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரை பெற காவல்துறையினர் மறுத்துவிட்டனர். இதன் காரணமாக, அவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

ஆனால், இத்தனை நடந்த பின்னரும், ஒரு அரசு அதிகாரி கூட அந்தப் பெண்ணை சந்திக்கவில்லை. இதுதான், பாஜக ஆட்சியில் பெண்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஆகும். பிரதமர் மோடியும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் எவ்வளவு அலட்சியமாக இருக்கின்றனர் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close